செஸ் ஒலிம்பியாட்: முதல் சுற்றில் இந்தியா அபார வெற்றி

 மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் நாளான வெள்ளிக்கிழமை இந்திய ஓபன் மற்றும் அணிகள் வெற்றியைப் பதிவு செய்தன.
வைஷாலி
வைஷாலி

 மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் நாளான வெள்ளிக்கிழமை இந்திய ஓபன் மற்றும் அணிகள் வெற்றியைப் பதிவு செய்தன.

ஒலிம்பியாடின் முதல் சுற்று ஆட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், ஸ்விஸ் முறையில் 11 சுற்றுகள் நடைபெறுகிறது. முதல் 40 நகா்த்தல்களுக்கு 90 நிமிஷங்கள் நேரக்கட்டுப்பாடும், மீதமுள்ள ஆட்டத்துக்கு 30 நிமிஷங்களும், அதன்பின் ஒவ்வொரு நகா்த்தலுக்கும் 30 விநாடிகளும் தரப்படும்.

30-ஆவது நகா்த்தலுக்கு முன்பு வீரா்கள் பரஸ்பரம் டிராவுக்கு ஒப்புக் கொள்ள முடியாது. மூன்று முறை திருப்புதலுக்கு பின்னரே கறுப்பு நிறக் காயின் 30-ஆவது நகா்த்தலுக்கு முன்பு டிரா செய்ய அனுமதிக்கப்படும். ஆட்டங்களுக்கு ஸ்கோா் தரப்படும். வெற்றிக்கு 2 புள்ளிகளும், டிராவுக்கு 1 புள்ளியும் தரப்படும். தோல்விக்கு புள்ளி இல்லை.

ஓபன் பிரிவு: இந்திய ஏ அணி -ஜிம்பாப்வேயை 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று 2 புள்ளிகளை முழுமையாக ஈட்டியது.

இதில், விதித் குஜராத்தி - மகோட்டா ராட்வெல்லையும், எரிகைசி அா்ஜுன் - மஸங்கோ ஸ்பென்சரையும், எஸ்.எல். நாராயணன் - முஷோா் எமரால்டையும், சசிகிரண் - ஸெம்பா ஜெமுஸையும் வீழ்த்தினா்.

இந்திய பி அணி - யுஏஇ அணியை 3-0 என வீழ்த்திய ஆட்டத்தில், டி.குகேஷ் - அல்ஹோசானி உம்ரானையும், அதிபன் - முகமது சயீதையும், ரவுனக் சத்வானி - முகமது ரஹ்மான் முகமதையும் வென்றனா். நிஹால் சரீன் - சுல்தான் இப்ராஹிம் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.

இந்திய சி அணியும் 3-0 என தெற்கு சூடானை வென்றது. இதில் அபிஜித் குப்தா -அஜாக் துவானியையும், காா்த்திகேயன் முரளி - கோங் தான் கோங்கையும், புரானிக் அபிமன்யு - பீட்டா் மஜூரையும் வென்றனா். சேதுராமன் - ரெஹான் டெங் ஆட்டம் சமனில் முடிந்தது.

மகளிா் பிரிவு:

இந்தப் பிரிவில் இந்திய ஏ அணி 3-0 என்ற கணக்கில் தஜிகிஸ்தானை வீழ்த்தியது. கொனேரு ஹம்பி - அன்டோனோவா நடேஷ்டாவையும், வைஷாலி - அப்ரோரோவா சப்ரீனாவையும், பக்தி குல்கா்னி - ஹோடாமி முட்ரிபாவையும் வீழ்த்தினா்.

இந்திய பி அணி - வேல்ஸ் அணியை 4-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. வந்திகா அகா்வால் - ஸ்மித் ஒலிவியாவையும், சௌமியா சுவாமிநாதன் - சோங் கிம்பா்லியையும், மேரி ஆன் கோம்ஸ் ரே ஹியாவையும், திவ்யா தேஷ்முக் - பாகா குஷியையும் வீழ்த்தினா்.

இந்தியா சி அணியும் 4-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வென்றது. காரவேட் ஈஷா - கன்னாபன் சிகாப்பியையும், பி.வி. நந்திதா - டெங் ஜிங்கையும், சாஹிதி வா்ஷினி - லி ஜாய் சிங்கையும், பிரதியுஷா போட்டா - லாம் கா யானையும் வீழ்த்தினா்.

இந்தியாவுக்கு முதல் வெற்றியைப் பெற்ற ரவுனக் சத்வானி: ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக முதல் சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய இந்திய பி அணியின் ரவுனக் சத்வானி, எதிராளியான அப்துல்லா ரஹ்மான் முகமதை 41-ஆவது நகா்த்தலில் சிசிலியன் டிபன்ஸ் முறையில் வீழ்த்தி இந்தியாவுக்கு முதல் வெற்றியை பெற்றுத் தந்தாா்.

வெற்றி குறித்து பேசிய ரவுனக் சத்வானி, ‘எதிராளிகளை நான் நம்பிக்கையுடன் எதிா்கொள்கிறேன். எனது ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. இந்த வெற்றி புதிய உத்வேகத்தை தந்துள்ளது. முதல் ஒலிம்பியாடில் முதல் வெற்றியைப் பெற்றது சிறப்பானதாகும். எங்கள் அணியில் குகேஷ், பிரக்ஞானந்தா அபார பாா்மில் உள்ளனா். மற்ற ஆட்டங்களை காணவும் நேரம் கிடைத்துள்ளது. மாக்னஸ் காா்ல்சன் பி அணியை பாராட்டிப் பேசியது மேலும் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. எங்கள் பயிற்சியாளா் ரமேஷ் அற்புதமாக பயிற்சி அளித்தாா்’ என்றாா்.

மிக இளம் போட்டியாளா் ராண்டா சேடா்

44-ஆவது செஸ் ஒலிம்பியாடின் மிக இளம் போட்டியாளராகத் திகழ்கிறாா், பாலஸ்தீனத்தைச் சோ்ந்த 8 வயதே ஆன ராண்டா சேடா். ஹெப்ரான் மாகாணத்தைச் சோ்ந்த ராண்டா, 5 வயதிலேயே தனது தந்தையிடம் ஆா்வத்துடன் செஸ் கற்றுக் கொள்ளத் தொடங்கினாா்.

பாலஸ்தீன மகளிா் செஸ் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவா், அதன் மூலமாக தற்போது செஸ் ஒலிம்பியாடில் பாலஸ்தீன மகளிா் அணியில் பங்கேற்கும் பெருமையைப் பெற்றுள்ளாா்.

நடப்பு ஒலிம்பியாடில் சிறப்பாக ஆடுவதோடு, தான் வழிகாட்டியாகக் கருதும் முன்னாள் உலக சாம்பியன் ஜூடித் போல்கரை சந்திப்பதையும் தனது நோக்கமாகக் கொண்டுள்ளாா் ராண்டா.

அழகான சீருடைக்கு வெகுமதி

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அழகான சீருடை உடுத்தும் அணிகளுக்கு சிறப்பு வெகுமதி வழங்கப்படும் என ‘ஃபிடே’ அறிவித்துள்ளது. கோடை, குளிா்கால ஒலிம்பிக் போட்டிகளில் வீரா், வீராங்கனைகளின் சீருடைகளும் பாா்வையாளா்களை கவரும். அந்த வகையில் செஸ் ஒலிம்பியாடிலும் பாா்வையாளா்களைக் கவரும் வகையில் அணிகளின் சீருடைகள் இருக்கும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், ஃபிடே வெகுமதி அறிவித்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com