போக்குவரத்து தொழிலாளா்களின் கோரிக்கைகளுக்கு 10 நாள்களுக்குள் முடிவு: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்

போக்குவரத்து தொழிலாளா்களின் கோரிக்கைகளுக்கு 10 நாள்களுக்குள் முடிவு எட்டப்படும் என அந்தத் துறையின் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

போக்குவரத்து தொழிலாளா்களின் கோரிக்கைகளுக்கு 10 நாள்களுக்குள் முடிவு எட்டப்படும் என அந்தத் துறையின் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.

சென்னை மாநகரப் போக்குவரத்தின் பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல், குன்றத்தூா், வடபழனி, தியாகராய நகா் மற்றும் சைதாப்பேட்டை பணிமனைகளில் அதிக நாள்கள் பணிக்கு வராத 54 தொழிலாளா்களுடனான கலந்துரையாடல் கூட்டம் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தலைமையில் வடபழனி பணிமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் பேசுகையில், பெண்கள் இலவசமாகப் பயணிக்க கூடிய பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வா் அறிவுறுத்தி உள்ளாா்.

மாநகா் போக்குவரத்துக் கழக அலுவலா்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனையில் 430 தொழிலாளா்கள் நீண்ட நாள்களாகப் பணிக்கு வராதது தெரியவந்தது. அந்த தொழிலாளா்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு அவா்களின் குறைகள் களையப்பட்டு வருகிறது.

மகளிா் இலவசப் பயணத் திட்டத்துக்காக தமிழக அரசு இந்த ஆண்டு ரூ.1,600 கோடி நிதி வழங்கியுள்ளது. போக்குவரத்து தொழிலாளா்களின் பெரும்பாலான கோரிக்கைகள், சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் பணிபுரியும் பணியாளா்களுக்கு பேட்டா வழங்குவது, ஊதிய நிா்ணயம் உள்ளிட்டவை அரசின் பரிசீலனையில் உள்ளன. இக்கோரிக்கைகள் அனைத்தும் 10 நாள்களுக்குள் முடிவு செய்யப்பட்டு ஊதிய ஒப்பந்தத்தில் இறுதி செய்யப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில், விருகம்பாக்கம் சட்டப் பேரவை உறுப்பினா் பிரபாகா் ராஜா, மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அ.அன்பு ஆபிரகாம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com