ஹிந்தி குறித்துப் பேசியது என்ன? டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்

ஹிந்தி மொழி குறித்த திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன் கருத்து சர்ச்சையான நிலையில், தற்போது அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஹிந்தி குறித்துப் பேசியது என்ன? டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்


ஹிந்தி மொழி குறித்த திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், தற்போது அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

திராவிடர் கழகம் சார்பில் அண்மையில் நடைபெற்ற மொழித் திணிப்பு குறித்த மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன், ஹிந்தி மொழி நுழைவது பற்றிப் பேசினார்.

அவர் பேசியதாவது:

"ஹிந்தி மொழி என்ன செய்யும்? நம்மை சூத்திரர்களாக்கும். அது நமக்கு எந்தப் பலனையும் தராது. மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் வளர்ச்சியடைந்த மாநிலங்களா, இல்லையா? ஏன் கேட்கிறேன் என்றால், இந்த மாநில மக்களின் தாய்மொழ் ஹிந்தி அல்ல.

மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட ஹிந்தி பேசும் மாநிலங்கள் வளர்ச்சியடையாத மாநிலங்கள். 

நான் ஏன் ஹிந்தி படிக்க வேண்டும். அவர்கள் நம் கலாசாரத்தை அழித்து ஹிந்தி மொழி மூலம் மனு தர்மத்தைத் திணிக்க முயற்சிக்கின்றனர். இதை அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால் நாம் அடிமைகளாக, சூத்திரர்களாக ஆகிவிடுவோம்.

வேற்றுமையில் ஒற்றுமைதான் நம் நாட்டின் அடையாளம். நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்து மொழிகளையும் ஊக்கப்படுத்த வேண்டும்."

இதில் சூத்திரர்கள் எனக் குறிப்பிட்டது சர்ச்சையான நிலையில், டிகேஎஸ் இளங்கோவன் இதுபற்றி தற்போது விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

"சூத்திரர் என்ற சொல்லை நான் உருவாக்கவில்லை. தமிழ்ச் சமூகம் சமநிலையானது. தெற்கில் வர்க்க வேறுபாடு கடைப்பிடிக்கப்படுவதில்லை. வடக்கிலிருந்து நுழைந்த மொழி, எங்களைப் பிரித்தது. திராவிட இயக்க காலத்தில் மக்கள் சூத்திரர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உரிமைகளுக்காகப் போராடினார்கள்.

நான் கூறியது என்னவென்றால், ஹிந்தி நுழைந்தால் வடக்கிலுள்ள கலாசார நடைமுறைகளும் உள்ளே நுழையும். எனவே, அது சூத்திர வர்க்கத்தை உறுதிப்படுத்தும் என்றுதான் நான் கூறினேன்" என்று தெரிவித்துள்ளார் இளங்கோவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com