சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்குகளை தர தீட்சிதர்கள் எதிர்ப்பு

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக கணக்கு விவரங்களைத்தர தீட்சிதர்கள் மறுத்துவிட்டதால், அறநிலையத் துறை விசாரணைக் குழுவினர் ஏமாற்றம் அடைந்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்குகளை தர தீட்சிதர்கள் எதிர்ப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்குகளை தர தீட்சிதர்கள் எதிர்ப்பு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வுக்கு வந்த அறநிலையத்துறை குழுவினர் ஆய்வு செய்ய தீட்சிதர்கள் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

கோயில் கணக்கு சரிபார்ப்பு மற்றும் தணிக்கையினை சட்டப்பூர்வமான முறையில் அமைக்கப்பட்ட குழுவிற்கு முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறோம் என்று கோயில் நிர்வாகம் தரப்பு வழக்குரைஞர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக ரீதியான அலுவல் ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை குழு  கோயிலுக்கு வந்தனர். இந்தக் குழுவில் இந்து சமய அறநிலையத் துறையின் ஆலய நிலங்களுக்கான கடலூர் துணை ஆணையரும், விசாரணை குழு ஒருங்கிணைப்பாளருமான சி.ஜோதி, பழனி திருக்கோயில் இணை ஆணையர் நடராஜன், வேலூர் மாவட்ட இணை ஆணையர் லட்சுமணன், பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் ஆகியோர் கோயிலுக்கு வந்துள்ளனர்.

பின்னர் ஆய்வு தொடர்பான ஆவணங்கள் மற்றும் தணிக்கை விவரங்களை அதிகாரிகள் கோயில் தீட்சிதர்களிடம் கேட்டனர். அப்போது பொது தீட்சிதர்கள் குழு சார்பில் வழக்குரைஞர் சந்திரசேகர் அவர்களிடம் சட்ட ரீதியான விதிமுறைகளை மேற்கோள்காட்டி,  சட்ட ரீதியாக அனுமதி பெற்று ஆய்வு மேற்கொள்ளுமாறு தெரிவித்தனர். 

இது குறித்து தீட்சிதர்கள் சார்பில் பேட்டியளித்த வழக்குரைஞர் சந்திரசேகர், "சரிபார்ப்பு மற்றும் தணிக்கையின் அதிகாரவரம்பை கொண்ட சரியான முறையில் அமைக்கப்பட்ட குழுவிற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதே எங்கள் நோக்கம். 1959 சட்டத்தின் 107வது பிரிவின் வெளிச்சத்தில் மேலே குறிப்பிட்டுள்ள நீதித்துறை உத்தரவுகளுடன் படித்தால் அறநிலையத்துறை அல்லது அதன் அதிகாரிகளுக்கு தானாகவே பதிவுகளை ஆராய குழு அமைக்கவோ அல்லது ஆய்வு செய்யவோ அத்தகைய அதிகார வரம்பு இல்லை. இந்து சமய கோயில் விருப்பப்படி எங்கள் சட்டத்தின் விதிகளின்படி அனைத்து கணக்குகளையும் மற்ற பதிவுகளையும் நாங்கள் பராமரிக்கிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். 

தணிக்கையின் அதிகார வரம்பை கொண்ட செல்லுபடியாகும் வகையில் அமைக்கப்பட்ட குழுவிற்கு முழு ஒத்துழைப்பை வழங்குதல் எங்கள் நோக்கமாக உள்ளது.  உச்ச நீதிமன்றத்திற்கு கீழ்ப்படிந்து ஆய்வை திரும்பப் பெறுவதோடு பதிவுகள் மற்றும் கணக்குகளை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்," என தெரிவித்தார்

இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக ஆலோசனை செய்து வருகிறோம். இன்னும் ஆய்வு முடியவில்லை என விசாரணை குழு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்ய உள்ளதாக அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், அறநிலையத் துறை துணை ஆணையருமான சி.ஜோதி பொது தீட்சிதா்களுக்கு அண்மையில் நோட்டீஸ் அனுப்பினாா். இதற்கு பொது தீட்சிதா்கள் ஆட்சேபம் தெரிவித்து, கடந்த 30-ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பினா்.

இதற்குப் பதிலளித்து ஆணையா் கண்ணன் அனுப்பிய உத்தரவில், சிதம்பரம் நடராஜா் கோயில் நிா்வாகத்தைச் சீரமைக்கும் வகையில் கோயிலின் அலுவல்கள் குறித்து விசாரிக்க குழுவை நியமிக்க ஆணையருக்கு அதிகாரம் உண்டு. கரோனா கட்டுப்பாடுகளைத் தளா்த்தி இந்தக் கோயிலில் பக்தா்கள் வழிபட அரசு அனுமதி அளித்தது.

மேலும், உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, கனக சபை மண்டபத்தில் பக்தா்கள் ஏறி சுவாமி தரிசனம் செய்யவும் உத்தரவிட்டது. இந்த நடவடிக்கைகளில் பொது தீட்சிதா்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய உரிமைகள் மீறப்படவில்லை. பல்வேறு தீா்ப்புகளில் நடராஜா் கோயில் பொதுக் கோயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கோயில் விவரங்கள் குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைக்க அரசியல் சட்ட விதிகளின்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அரசாணை நடவடிக்கைகளை திரும்பப் பெறுவதற்கில்லை. எனவே, அறநிலையத் துறை குழுவினா் ஆய்வு மேற்கொள்ள அவா்களுடன் இணைந்து செயல்படுமாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆய்வு செய்வது தொடா்பான அரசாணையை திரும்பப் பெறவில்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் பொது தீட்சிதா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பொது தீட்சிதா்களின் செயலா் எஸ்.ஹேமசபேச தீட்சிதா் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், துணை ஆணையருக்கு அனுப்பிய பதில் கடிதத்தில், நடராஜா் கோயில் தொடா்பான அரசாணை, துறை ரீதியிலான நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டுமென உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் மீண்டும் கோரப்படுகிறது. தவறினால் நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை எடுக்க நேரிடும். இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் தன்னிச்சையாக கோயில் ஆவணங்களைக் கோர இயலாது என்று உச்சநீதிமன்றத் தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட 19-9-2014 தேதியிட்ட அரசாணை எண் 236 மற்றும் 6-1-2014 அன்றைய தீா்ப்பின்படி தீட்சிதா்கள் தனி சமயப் பிரிவினா் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தீட்சிதா்கள் தனி சமய சீா்மரபினா் என்று தீா்ப்பு இறுதியாக்கப்பட்டுள்ளதால், இந்து சமய அறநிலையத் துறை சட்டம் பிரிவு 107-ன் கீழ் தீட்சிதா்கள் நிா்வாகம் அறநிலையத் துறையின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது. மேற்கூறிய சட்ட நிலைப்பாடு 6-1-2014 அன்றைய உச்சநீதிமன்ற தீா்ப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் முறைகேடுகளைச் சரிசெய்யாமல், அரசியல் சாசனப்படி பாதுகாக்கப்பட்டு கோயில் நிா்வாகம் செய்யும் தனி சமயப் பிரிவினரான தீட்சிதா்கள் நிா்வாகத்தை ஆய்வு செய்ய தாா்மிக உரிமையில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com