சிதம்பரம் கோயில் விவகாரத்தில் சுமுக முடிவு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு நம்பிக்கை

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் சுமுகமான முடிவு ஏற்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நம்பிக்கை தெரித்தார்.
சிதம்பரம் கோயில் விவகாரத்தில் சுமுக முடிவு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு நம்பிக்கை

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் சுமுகமான முடிவு ஏற்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நம்பிக்கை தெரித்தார்.
 கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை குழுவினர் ஆய்வு செய்ய உள்ளதாக அண்மையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு கோயில் பொது தீட்சிதர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
 இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அமைச்சர் சேகர்பாபு திங்கள்கிழமை வந்தார். அவரை பொது தீட்சிதர்கள் வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு, அமைச்சர் சேகர் பாபு கனக சபை மீது ஏறி நடராஜப் பெருமானை தரிசனம் செய்தார். தொடர்ந்து தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தார்.
 இதையடுத்து, ஆயிரங்கால் மண்டபம் முன் உள்ள நடனப் பந்தலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தரையில் அமர்ந்து, கோயில் பொது தீட்சிதர்களுடன் கலந்துரையாடினார். அப்போது இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் அசோக்குமார், துணை ஆணையர் ஜோதி, உதவி ஆணையர் சந்திரன், கோட்டாட்சியர் கே.ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 கலந்துரையாடலில் தீட்சிதர்கள், அரசின் நிலைப்பாடுகள் குறித்து பகிர்ந்து கொண்டோம். தீட்சிதர்கள் இறையன்பர்கள். அதேநேரத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் சட்ட திட்டங்கள் யாருக்கும் மன கஷ்டங்களின்றி செயல்படுத்தப்படும். சிதம்பரம் கோயில் விவகாரத்தில் சுமுகமான முடிவு ஏற்படும். அனைவருக்கும் மன திருப்தி அளிக்கும் வகையில் முடிவுகள் அமையும்.
 இந்த அரசு துலாக்கோல் போன்றது. அனைவருக்கும் சமமான நீதி வழங்கும். கோயிலின் பாரம்பரியம் மாறாமலும், அதேநேரத்தில் இறையன்பர்களுக்கு உண்டான சுவாமி தரிசன முறையில் எவ்வித குந்தகமும் ஏற்படாமலும் பக்தர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் ஒரு பாலமாக செயல்பட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார் அவர்.
 முன்னதாக, அமைச்சருக்கு திமுக நகரச் செயலர் கே.ஆர்.செந்தில்குமார், பொதுக் குழு உறுப்பினர் த.ஜேம்ஸ் விஜயராகவன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
 வடலூரில் ஆய்வு: அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறியதாவது:
 வள்ளலார் தெய்வ நிலையத்தில் சர்வதேச மையம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தோம். இதற்கான வரைபடங்கள் கோரப்பட்டதில் 11 ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பித்தனர். இவர்களில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
 வரைபடம் குறித்து முதல்வர் தலைமையில் இம்மாத இறுதிக்குள் முடிவுசெய்து பணிகள் தொடங்கப்படும். வரும் அக். 5-ஆம் தேதி வள்ளலார் முப்பெரும் விழா கொண்டாடப்பட உள்ளது. அந்த விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com