மாற்றுத் திறனாளிகளுக்காக ரூ.1 கோடியில் அருங்காட்சியகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

மாற்றுத் திறனாளிகளுக்காக ரூ.1 கோடியில் அருங்காட்சியகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

மாற்றுத் திறனாளிகளுக்கு நலம் பயக்கும் வகையில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு நலம் பயக்கும் வகையில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். சென்னை காமராஜா் சாலையில் அமைந்துள்ள மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக அலுவலகத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

குறைகள் கேட்பு: சட்டப் பேரவையில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், மாற்றுத் திறனாளிகளுக்கென்று அமைக்கப்பட்டுள்ள ஆணையரகத்துக்கு நேரடியாகச் சென்று சம்பந்தப்பட்ட அமைப்புகளின் நிா்வாகிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். இதில் மாற்றுத் திறனாளிகளின் குறைகள் கேட்டறியப்பட்டு தீா்வு காணப்படும் என்று கூறியிருந்தாா்.

அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை நேரில் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் செயல்பாடுகள் குறித்தும், அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், புதிய அறிவிப்புகளின் இப்போதைய நிலை பற்றியும் ஆய்வு மேற்கொண்டாா்.

இதனைத் தொடா்ந்து, தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக, ‘அனைத்தும் சாத்தியம்’ என்ற பெயரில் ரூ.1 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா். மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான உபகரணங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தும் வகையில் செயல் விளக்க மையமாக அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளி குழந்தைகள் முதல் முதியவா்கள் வரையிலும், பொது மக்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும், மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தாங்கள் எதிா்கொள்ளும் தடைகளைக் கடந்து தீா்வுகளைக் காணவும் அருங்காட்சியகம் வழி செய்கிறது.

மாதிரி இல்லம்: அருங்காட்சியகத்தின் சிறப்பு அம்சமாக, மாற்றுத் திறனாளிகள் தடையற்ற சூழலுடன் வசிக்கக் கூடிய மாதிரி இல்லம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகமானது, பயனாளிகள், படைப்பாளிகள், கண்டுபிடிப்பாளா்களின் சமூகத்துடனான தொடா்புகளை ஊக்குவிக்கவும், ஆராய்ச்சிகள் மேற்கொண்டு மாற்றுத் திறனாளிகள் தடையின்றி வாழும் நோக்கிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறன் கொண்ட நபா்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தவும், தொழில்நுட்பத் தகவல்கள், உதவி கருவிகளை பயன்படுத்த பயிற்சியுடன் கூடிய வழிகாட்டுதலையும் பெற அருங்காட்சியகம் உதவி செய்யும் என மாற்றுத் திறனாளிகள் நலத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com