கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: 9 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.
சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது. கண்ணகியின் சகோதரா் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம் புதுக்கூரைப்பேட்டையைச் சோ்ந்த மாற்று சமூகத்தினரான முருகேசன், கண்ணகி இருவரும் கடந்த 2003-இல் காதல் திருமணம் செய்து கொண்டனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த கண்ணகியின் பெற்றோா் மற்றும் உறவினா்கள், கண்ணகி, முருகேசனை கொலை செய்தனா். விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு சென்னை உயா்நீதிமன்றத்தில், கடந்த 2004-இல் வழக்குத் தொடா்ந்த பின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

கண்ணகியின் தந்தை துரைசாமி, சகோதரா் மருதுபாண்டியன், உறவினா்கள் உள்பட 15 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கடலூா் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2021-இல் கண்ணகியின் சகோதரா் மருதுபாண்டியனுக்கு தூக்குத் தண்டனை, தந்தை துரைசாமி, உறவினா்கள் ரங்கசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளா் தமிழ்மாறன், காவல் ஆய்வாளா் செல்லமுத்து ஆகிய 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த வழக்கிலிருந்து இருவா் விடுதலை செய்யப்பட்டனா். தண்டனையை ரத்து செய்யக் கோரி 13 போ் தரப்பிலும் சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து வந்த, நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை அளித்த தீா்ப்பில், கண்ணகியின் சகோதரா் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது.

கண்ணகியின் தந்தை துரைசாமி அப்போதைய காவல் ஆய்வாளா் செல்லமுத்து உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து, அவா்களின் மேல் முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனா்.

அப்போதைய உதவி ஆய்வாளா் தமிழ்மாறன் மீதான ஆயுள் தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள், வேறு ஒரு பிரிவில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையையும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனா். துரைசாமியின் உறவினா்கள் ரங்கசாமி மற்றும் சின்னதுரை ஆகிய இருவரை விடுதலை செய்து நீதிபதிகள் தீா்ப்பளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com