திருநள்ளாற்றில் பிரம்மோற்சவ தேரோட்டம் 

ருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி  ஸ்ரீ செண்பக தியாகராஜ சுவாமி, ஸ்ரீ நீலோத்பாலாம்பாள் வீற்றிருந்த தேரோட்டம் வியாழக்கிழமை காலை தொடங்கியது.
திருநள்ளாற்றில் பிரம்மோற்சவ தேரோட்டம் 

காரைக்கால்:  திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி  ஸ்ரீ செண்பக தியாகராஜ சுவாமி, ஸ்ரீ நீலோத்பாலாம்பாள் வீற்றிருந்த தேரோட்டம் வியாழக்கிழமை காலை தொடங்கியது.

திருநள்ளாற்றில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. அம்பாள் ஸ்ரீ பிரணாம்பிகையாகவும் மூலவர் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரராகவும் அருள்பாலிக்கின்றனர். சப்த விடங்க தலங்களுள் ஒன்றாகவும், பாடல் பெற்ற தலமாகவும் உள்ளது. நளச் சக்கரவர்த்தி தோஷம் விலக இக்கோயிலில் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை வழிபட்டு பயன்பெற்றதாக கருதப்படுவதால்,  இக்கோயிலில் மூலவர் சிறப்புக்குரியவராக உள்ளார். சனீஸ்வரபகவான் தனி சந்நிதிகொண்டு அனுகிரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தல விருட்சம் தர்ப்பையாகும்.  இவ்வகை சிறப்புகளுடைய இத்தலத்துக்கு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர், ஸ்ரீ சனீஸ்வரபகவானை  தரிசிக்க நாடெங்குமிருந்து இக்கோயிலுக்கு பக்தர்கள்  வருகின்றனர்.

ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவம்  நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக உற்சவம் கரோனா பரவலால் நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த மே 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றுவருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு  தேர் படம் பிடித்து இழுக்கப்பட்டது.  முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு 12 மணியளவில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத  சுப்ரமணியர், ஸ்ரீ சண்டிகேசுவரர், ஸ்ரீ நீலோத்பாலாம்பாளுடன் ஸ்ரீ செண்பக தியாகராஜசுவாமி தேருக்கு எழுந்தருளினார். அப்போது யதாஸ்தானத்திலிருந்து ஸ்ரீ செண்பக தியாகராஜசுவாமி உன்மத்த நடனத்தில் எழுந்தருளினார்.

வலம் வரும் 5 தேர்கள் :  பெரிய தேரில் ஸ்ரீ செண்பக தியாகராஜசுவாமியும், சிறிய தேரில் ஸ்ரீ நீலோத்பாலாம்பாளும் வீற்றிருக்கின்றனர். ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் தனித்தனி தேரில் வீற்றிருக்கின்றனர்.   ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ செண்பக தியாகராஜசுவாமி, ஸ்ரீ நீலோத்பாலாம்பாள், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் தேர்கள் என வரிசைப்படி இழுக்கப்படுகிறது. 

தேரோட்டத்தையொட்டி காலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம் ஆகியவை நடத்தப்பட்டு தேரில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமணியர், சுவாமி, அம்பாள் ஆகியவைகளுக்கு கலசநீர் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து முக்கிய பிரமுகர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தி தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுவை சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சிவா, தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், கோயில் நிர்வாக அதிகாரி கே.அருணகிரிநாதன் உள்ளிட்டோர் தேரோட்ட தொடக்க பூஜையில் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தேரோட்டத்தில் கலந்துகொண்டு 5 தேர்களை இழுத்துச் செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com