தமிழகத்தில் விரைவில் 708 நலவாழ்வு மையங்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் விரைவில் 708 நலவாழ்வு மையங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்(கோப்புப்படம்).
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்(கோப்புப்படம்).

சென்னை: தமிழகத்தில் விரைவில் 708 நலவாழ்வு மையங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட வளசரவாக்கம் பகுதிகளில் ரூ.2.37 கோடி மதிப்பில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகளை அமைச்சா் மா.சுப்ரமணியன் வியாழக்கிழமை தொடக்கி வைத்து செய்தியாளா்களிடம் கூறியது:

சென்னையைப் பொருத்தவரை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிா்வாகத் துறையின் சாா்பில் சுமாா் ரூ.4,749 கோடி மதிப்பில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் வளசரவாக்கம் மண்டலத்தில் மகாத்மா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி தெருக்களில் ரூ.2.37 கோடி மதிப்பீட்டில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகரில் மழை நீா் வடிகால் அமைக்கும் பணிகளை ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கும் விதமாக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நகா்ப்புறங்களில் பொதுமக்களுக்கு அவா்கள் வசிப்பிடங்களுக்கு அருகே மருத்துவ சிகிச்சைகளை அளிக்க ஏதுவாக 708 நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் 200 வாா்டுகளிலும் தலா ஒரு நலவாழ்வு மையம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் தமிழகம் முழுவதும் அந்த மையங்கள் செயல்பாட்டுக்கு வரும்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பல்வேறு தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவா்களின் இல்லம் தேடி மருந்துப் பெட்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 72,87,659 பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 1,81,000 பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மேயா் பிரியா, மதுரவாயல் எம்எல்ஏ கணபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com