கருவுற்ற பெண்களுக்கு பணி நியமன மறுப்பு: உத்தரவை திரும்பப் பெற சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

“கருவுற்ற பெண்கள் பணிநியமனத்துக்கு தற்காலிக தகுதியற்றவர்கள்”என்ற இந்தியன் வங்கியின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது இந்த உத்தரவை இந்தியன் வங்கி திரும்பப் பெற வேண்டும்.
கருவுற்ற பெண்களுக்கு பணி நியமன மறுப்பு: உத்தரவை திரும்பப் பெற சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

“கருவுற்ற பெண்கள் பணிநியமனத்துக்கு தற்காலிக தகுதியற்றவர்கள்”என்ற இந்தியன் வங்கியின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது இந்த உத்தரவை இந்தியன் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்  வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, சு.வெங்கடேசன் இந்தியன் வங்கித் தலைவர் சாந்தி லால் ஜெயினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தியன் வங்கி அண்மையில் புதிய பணி நியமனம் பெறுபவர்களின் உடல் நலத் தகுதி பற்றி வெளியிட்டுள்ள வழிகாட்டல்கள் பாலின பாரபட்சத்தோடு அமைந்துள்ளது. அதன் வழிகாட்டல் கூறுவது இதுதான்.

“பெண் தேர்வர் மருத்துவப் பரிசோதனையின்போது 12 வாரங்கள் அல்லது அதற்கு மேல் கருவுற்ற காலத்தை கடந்திருப்பது தெரியவரும் பட்சத்தில், பிரசவத்திற்கு பிந்தைய ஓய்வு காலம் வரையிலும், அவர் பணி நியமனம் பெற தற்காலிகமாக தகுதி அற்றவர் என்று கருதப்படுவார். பிரசவம் முடிந்து 6 வாரம் நிறைவு பெற்ற பின்னர், பதிவு செய்யப்பட்ட மருத்துவர் இடம் இருந்து உடல் நல தகுதி பெற்று சமர்ப்பிக்கப்பட்டால், அவர் மறு மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உடல் நலத் தகுதி உறுதி செய்யப்பட வேண்டும்.” இது அப்பட்டமான பாலின பாரபட்ச நடைமுறை.

அரசியல் சாசனத்தின் பிரிவுகள் 14, 15, 16 ஆகியவற்றுக்கு விரோதமானது. சட்டத்தின் முன் எல்லோரும் சமம், எந்த குடிமக்களும் பாலினம் உள்ளிட்ட எந்த காரணங்களாலும் பாரபட்சத்திற்கு ஆளாகக் கூடாது, வேலை வாய்ப்பில் பணி நியமனங்களில் எல்லா குடி மக்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். எந்த வேலை வாய்ப்புகளிலும் பாலின பாரபட்சம் உள்ளிட்ட வேறுபாடுகள் காண்பிக்கப்படக் கூடாது என்று அரசியல் சாசனத்தின் பிரிவுகள் மிகத் தெளிவாக கூறுகின்றன. பொதுத் துறை வங்கிகள் அரசுக்கு உடமையானவை. “முன் மாதிரி பணியமர்த்துபவர்கள்” ஆக இருக்க வேண்டும்.

ஆனால், இந்தியன் வங்கியின் அணுகுமுறை அதன் பிற்போக்கான மன நிலையை, பாலின பாரபட்ச அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. இவ்வழிகாட்டல்களின் நோக்கம், பிரசவ விடுப்பு பயனைத் தவிர்ப்பது ஆகும்.

வங்கியின் அணுகுமுறை, அவர்களின் ஊதிய இழப்பிற்கு இட்டுச் செல்வதோடு, பணி முதிர்ச்சி காலத்திலும் பாதிப்பை உண்டாக்கும். 6 மாதம் முதல் 10 மாதம் வரையிலான “பணி நியமன மறுப்பு” பணி ஓய்வு பயன்களான பி.எப், பென்சன், பணிக் கொடை வரை பாதிப்புகளை உண்டாக்கும்.

இதுபோன்ற பிரச்னை ஸ்டேட் வங்கியில் எழுந்து எனது தலையீட்டிற்கு பிறகு அந்த வழிகாட்டல்கள் திரும்பப் பெறப்பட்டன. ஆனால், இப்போது இந்தியன் வங்கி அதே வகையிலான பாரபட்சத்தை இழைக்கிறது. இந்தியன் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியும் இதேபோன்ற வழிகாட்டல்களை விடுத்திருப்பதாக அறிய வருகிறேன். இந்தியன் வங்கியின் அறிவுறுத்தலாக இருந்திருக்க கூடும்.

தாங்கள் உடனடியாக தலையிட்டு இத்தகைய பாலின அநீதியை தடுத்து நிறுத்துமாறும், இந்தியன் வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி இரண்டு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள வழிகாட்டல்களை திரும்பப் பெறுமாறும் வலியுறுத்துகிறேன்.

மேலும், இத்தகைய பாலின பாரபட்ச வழிகாட்டல்களை வெளியிட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகிறேன் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com