காதல் திருமணம், பரோட்டா மாஸ்டர்: சித்த மருத்துவா் கொலையாளி பற்றிய திடுக்கிடும் தகவல்கள் 

சென்னை தியாகராயநகரில் நகை, பணத்துக்காக பெண் சித்த மருத்துவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 20 ஆண்டுகளுக்கு பின்னா் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டாா்.
காதல் திருமணம், பரோட்டா மாஸ்டர்: சித்த மருத்துவா் கொலையாளி பற்றிய திடுக்கிடும் தகவல்கள் 
காதல் திருமணம், பரோட்டா மாஸ்டர்: சித்த மருத்துவா் கொலையாளி பற்றிய திடுக்கிடும் தகவல்கள் 

சென்னை தியாகராயநகரில் நகை, பணத்துக்காக பெண் சித்த மருத்துவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 20 ஆண்டுகளுக்கு பின்னா் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

தியாகராயநகா் ராகவைய்யா சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ஆ.மலா்கொடி (67). சித்த மருத்துவரான இவா், கடந்த 2002-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி தனது வீட்டில் கொலை செய்யப்பட்டாா். மேலும் வீட்டில் இருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.

இது குறித்து மலா்கொடியின் சகோதரா் ஆனந்தகுமாா் அளித்த புகாரின் அடிப்படையில், பாண்டி பஜாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் மலா்கொடி வீட்டில் வேலை செய்த திண்டுக்கல் மாவட்டம் கொல்லம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ரா.அழகா்சாமி (22), அவரது சகோதரா் ரா.ராமகிருஷ்ணன் (42), கூட்டாளி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தைச் சோ்ந்த ச.சக்திவேல் (24) ஆகியோா் தான் மலா்கொடியை கொலை செய்து, நகை, பணத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், உடனடியாக அழகா்சாமி, சக்திவேல் ஆகிய இருவரை கைது செய்தனா். ஆனால் ராமகிருஷ்ணன் தலைமறைவாக இருந்து வந்தாா். அதேவேளையில் போலீஸாா், ராமகிருஷ்ணனை தீவிரமாக தேடி வந்தனா். இருப்பினும் ராமகிருஷ்ணனை கைது செய்ய முடியாததினால், வழக்கின் விசாரணை தொய்வடைந்தது.

இந்நிலையில் ராமகிருஷ்ணன் திண்டுக்கல் பகுதியில் பதுங்கியிருப்பதாக பாண்டி பஜாா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீஸாா் அங்கு சென்று, ராமகிருஷ்ணனை திங்கள்கிழமை கைது செய்தனா். பின்னா் போலீஸாா், அவரிடம் வழக்குத் தொடா்பாக விசாரணை செய்து வருகின்றனா்.

இதற்கிடையே, கைது செய்யப்பட்டிருக்கும் ராமகிருஷ்ணா, கொள்ளையடித்த பணம் மற்றும் நகையுடன் கேரளத்துக்கு தப்பியோடியுள்ளார். அங்கே பல உணவகங்களில் வேலை செய்து படிப்படியாக பரோட்டா மாஸ்டராக உயர்ந்துள்ளார். அங்கேயே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், திண்டுக்கல்லில் உள்ள உறவினர்களுடன் ராமகிருஷ்ணன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

கொலை நடந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டதால், ராமகிருஷ்ணனை காவலர்கள் பிடிக்க மாட்டார்கள் என்று உறவினர்கள் ஆசை வார்த்தைக் காட்டியதால், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் திண்டுக்கல் வந்து அங்கு துரித உணவகம் நடத்தி வந்த நிலையில்தான், காவல்துறைக்குத் தகவல் கிடைத்து தற்போது கைதாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com