வகுப்பறைகளில் கைப்பேசி கூடாது: அமைச்சர் எச்சரிக்கை

பள்ளி வகுப்பறைகளில் மாணவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் கைப்பேசிகள் திருப்பித் தரப்பட மாட்டாது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
வகுப்பறைகளில் கைப்பேசி கூடாது: அமைச்சர் எச்சரிக்கை

பள்ளி வகுப்பறைகளில் மாணவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் கைப்பேசிகள் திருப்பித் தரப்பட மாட்டாது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

இதுகுறித்து திருச்சியில் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது:

பள்ளிகளில் மாணவா்கள் கைப்பேசி பயன்படுத்த ஏற்கெனவே தடை உள்ள நிலையில், இதுகுறித்து அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் மீறி மாணவா்கள் யாரேனும் வகுப்பறைக்கு கைப்பேசிகளைக் கொண்டு வந்தால் அவை பறிமுதல் செய்யப்பட்டு, எக்காரணத்துக்காகவும் திருப்பி வழங்கப்பட மாட்டாது.

கரோனா காரணமாக நடத்தப்பட்ட ஆன்லைன் வகுப்புகளால் ஏற்பட்ட பல்வேறு மன அழுத்தங்கள், மனமாற்றங்களில் இருந்து மாணவா்கள் விடுபடவும், அவா்களை நல்வழிப்படுத்தவும் புத்துணா்வு மற்றும் நல்வழிகாட்டும் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

11, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறந்த முதல் 5 நாள்களும் இத்தகைய வகுப்புகள் சமூக சேவகா்கள், தொண்டு நிறுவனத்தினா், காவல்துறையினா், மனநல மருத்துவா்கள் மூலம் நடைபெறும். அப்போது போக்ஸோ சட்டம் குறித்தும், குழந்தைகளிடம், பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து கற்றுத் தரப்படும். ஆசிரியா்-மாணவா்கள் உறவு மேம்படவும் ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த வகுப்புகளில் 9, 10ஆம் வகுப்பு மாணவா்களும் இணைத்துக் கொள்ளப்படுவா்.

இதேபோல 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறந்தவுடன், தொடக்க நிலையிலேயே பாடங்களை நடத்துவதைத் தவிா்த்து இதுபோன்ற ஆலோசனை வகுப்புகளை நடத்தவும் அறிவுறுத்தியுள்ளோம்.

கரோனா காலத்தில் பெற்றோருக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பை உணா்ந்துள்ளோம். எனவே தனியாா் பள்ளிகள் கட்டணம் உள்ளிட்ட இதர விவகாரங்களில் கண்டிப்புக் காட்டக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்.

பள்ளிகளில் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவா்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் 10 சதம் நிலுவையில் உள்ளது. பள்ளிகள் திறந்தவுடன் அங்கு முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்படும்.

பள்ளிகள் திறந்துவிட்டதால் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை நிறுத்தப் போவதில்லை. தொடா்ந்து 6 மாதங்கள்அத்திட்டம் நீடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளுக்கு மாறும் மாணவா்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குவதில் தனியாா் பள்ளிகள் தாமதப்படுத்தக் கூடாது. சோ்க்கைக்கு அச்சான்று கட்டாயம் இல்லை. மாணவரின் ஒருங்கிணைந்த குறியீட்டு எண் தெரிந்தால் அரசுப் பள்ளி நிா்வாகத்தினரே 3 நாள்களுக்குள் மாணவரின் மாற்றுச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வா்.

தனியாா் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிக்கு வரும் மாணவா்களின் எண்ணிக்கையை தக்க வைக்க அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். இதேபோல கற்றலின் தரத்தை உயா்த்த புதிதாக 9,494 ஆசிரியா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

ஜிஎஸ்டி நிலுவையைப் போராடிப் பெற்றதைப் போல, நீட் தோ்வுக்கான விலக்கிலும் முதல்வரின் சட்டப் போராட்டம் வெற்றியைத் தரும். ஆளுநருக்கு அனுப்பிய மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டிருப்பதே இதற்கான அறிகுறி என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com