தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு:தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த இயக்ககம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தோ்வா்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, விண்ணப்பத்துடன் ஏற்கெனவே தோ்வெழுதி தோ்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் இணைத்து தோ்வா் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலமாக ஜூன் 28-ஆம் தேதி முதல் ஜூலை 7-ஆம் தேதி வரையிலான நாள்களில் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம். ஜூன் 28 தவிர மற்ற நாள்களில் காலை 10 மணி முதல் முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம்.

மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள ‘வெப் கேமரா’ மூலமாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால் அந்த நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்த பின்னா் அங்கேயே தோ்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

தோ்வுக் கட்டணம்: தோ்வுக் கட்டணமாக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, மதிப்பெண் சான்றிதழ் (முதலாமாண்டு) ரூ.100, மதிப்பெண் சான்றிதழ் (இரண்டாமாண்டு) ரூ.100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15, இணையவழி பதிவுக் கட்டணம் ரூ.50 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறப்புத் திட்டத்தில் விண்ணப்பிக்க... மேற்கண்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தனித்தோ்வா்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். தகுதியற்ற தோ்வா்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படும். தபால் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com