ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் நியமிக்கும் முடிவு நாட்டிற்கே ஆபத்து: பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ.,

ராணுவத்தின் முப்படைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் நியமிக்கும் முடிவு நாட்டிற்கே ஆபத்து என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பண்ருட்டி தி. வேல்முருகன் தெரிவித்துள
ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் நியமிக்கும் முடிவு நாட்டிற்கே ஆபத்து: பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ.,

சென்னை: ராணுவத்தின் முப்படைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் நியமிக்கும் முடிவு நாட்டிற்கே ஆபத்து என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பண்ருட்டி தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்காண்டு ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இந்திய இளைஞர்களின் போராட்டம் நாளுக்குநாள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. பிகாரில் தொடங்கிய போராட்டம், அரியானா, பஞ்சாப், தெலங்கானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாசல பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், ஜம்மு - காஷ்மீர், ஒடிசா, தமிழ்நாடு, கேரளம் என நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

சீனா, பாகிஸ்தான் என அண்டை நாடுகள் மூலமான மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவும் இந்த சூழலில், நான்காண்டு ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தின் முப்படைகளிலும் ஆளெடுக்கும் முடிவு, நாட்டிற்கே ஆபத்தாக முடியும். குறிப்பாக, இராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் பணிச் சூழல் மற்றும் அது தொடர்பான விதிமுறைகளை நீர்ந்து போகச் செய்தால், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

குறுகிய கால வேலைவாய்ப்பு அடிப்படையில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு, அரசாங்கக் கருவூலத்தின் நிதியைக் கொண்டு அவர்களுக்கு முழு அளவிலான பயிற்சி அளிப்பது மற்றும் ஒப்பந்த முறையில் பணிக்கு நியமனம் செய்வது ஆகியவை ராணுவச் சேவைகளின் தரத்தைக் குறைக்கும். அக்னிபாத் திட்டம் காரணமாக, இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் மனதில் அதிருப்தி, விரக்தி மற்றும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது போராட்டத்தின் வாயிலாக தெளிவாகத் தெரிகிறது.

எனவே, ஆயுதப் படைகளில் 10 விழுக்காடு ஒதுக்கீடு, வயது வரம்பு தளர்வு என்பது போன்ற பசப்பு வார்த்தைகளை கூறி, நாட்டின் அடுத்த தலைமுறையான இளைஞர்கள், மாணவர்களை ஏமாற்றாமல், அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com