பொதுக்குழுவுக்கு ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக வருவார்: இபிஎஸ் தரப்பினர்

அதிமுக பொதுக்குழுவுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உறுதியாக வருவார் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

அதிமுக பொதுக்குழுவுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உறுதியாக வருவார் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். 

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கடந்த 7 நாள்களாக அந்தக் கட்சிக்குள் ஒற்றைத் தலைமை சா்ச்சை தீவிரமடைந்துள்ளது. இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறியதாவது, அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்கக் கோரி எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். பொதுக்குழுவை ஒத்திவைக்கக் கோரும் கடிதம் நேற்றே எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நிகழ்ச்சி நிரலை முன்கூட்டியே நிர்ணயித்து பொதுக்குழுவை நடத்த வேண்டும். பன்னீர்செல்வத்துக்கு 30 மாவட்டச்செயலாளர்கள் ஆதரவு உள்ளது. 15 மாவட்டச்செயலாளர்கள் நேரடியாக ஆதரித்துள்ளனர். 

15 மாவட்டச் செயலாளர்கள் நடுநிலை வகிக்கின்றனர். எடப்பாடி தரப்பு, சர்வாதிகார போக்குடன் ஒற்றைத் தலைமையை கொண்டுவர முயற்சிக்கிறது. கட்சி உடையாமல் இருக்க வேண்டும் என்பதே ஓபிஎஸ் தரப்பின் எண்ணம். எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பதில் வந்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார். இதனால் திட்டமிட்டபடி வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இன்று செய்தியாளர்கள் சந்தித்து விளக்கமளித்தனர். அதில், ஜூன் 23-ல் அதிமுக பொதுக்குழு வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் திட்டமிட்டபடி நடைபெறும். 

மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் அதிமுக பொதுக்குழு நடைபெறும். இபிஎஸ்க்கு ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் குறித்து எங்களுக்கு எதவும் தெரியாது. ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றிருந்தால் இபிஎஸ் எங்களிடம் தெரிவித்திருப்பாரே?. பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான ஆலோசனையில் ஓபிஎஸ் கலந்துகொண்டார். பொதுக்குழு கூட்டத்தை நடத்தி தீர்மானத்தை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்தார். பொதுக்குழுக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்பது அனைவரின் ஒப்புதலுடன் முடிவு செய்யப்பட்டது. அதிமுக உட்கட்சி தேர்தலை சுட்டிக்காட்டி சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்றார் ஓபிஎஸ். 

அதிமுகவின் பெரும்பாலான மூத்த தலைவர்கள் பொதுக்குழு கூட்டத்தை நடத்த ஆதரவாக உள்ளனர். அதிமுக பொதுக்குழுவுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உறுதியாக வருவார். பொதுக்குழுவில் பங்கேற்று ஓபிஎஸ் தனது கருத்துகளை எடுத்துரைப்பார். ஒருசில குழப்பவாதிகள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு குழப்பம் விளைக்க முயற்சி செய்கின்றனர். பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமைத் தீர்மானம் கொண்டு வரப்படுமா என்பது குறித்து இப்போது கூறமுடியாது. இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com