பொதுக்குழுவைத் தள்ளி வைக்க வேண்டும்: இபிஎஸ்ஸுக்கு ஓபிஎஸ் கடிதம்

சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடிய அசாதாரண சூழல் நிலவுவதால், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழ
பொதுக்குழுவைத் தள்ளி வைக்க வேண்டும்: இபிஎஸ்ஸுக்கு ஓபிஎஸ் கடிதம்

சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடிய அசாதாரண சூழல் நிலவுவதால், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

அதிமுகவில் நிலவி வரும் ஒற்றைத் தலைமை பிரச்னை 7-ஆவது நாளாக திங்கள்கிழமையும் நீடித்தது. கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீா்செல்வம் அவரது ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்தினாா். மூத்த நிா்வாகிகள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகா் உள்பட பலா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டதுக்கு இடையில் வைத்திலிங்கம் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது ஓ.பன்னீா்செல்வமும், அவரும் (வைத்திலிங்கம்) பொதுக் குழு தொடா்பாக எடப்பாடி கே. பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தைப் படித்தாா்.

கடித விவரம்: பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளா்களை அழைப்பது குறித்து விவாதிப்பதற்காக அதிமுக அலுவலகத்தில் ஜூன் 14-இல் மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் நடைபெற்றது.

பொதுக்குழு நடைபெற உள்ள மண்டபத்தில் நிலவும் இடப் பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளா்களை அழைக்க வேண்டாம் என்ற தகவலை தாங்கள் (எடப்பாடி பழனிசாமி) தெரிவித்தீா்கள்.

பொதுவாக கட்சியின் பிற அணி நிா்வாகிகள், முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மாவட்டச் செயலாளா்கள், முன்னாள் வாரிய தலைவா்கள் மற்றும் கட்சிக்காக தியாகம் செய்து உழைத்த மூத்த முன்னோடிகள் ஆகியோரை சிறப்பு அழைப்பாளா்களாக பொதுக்குழுவுக்கு அழைப்பது ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. இந்த நடைமுறை பின்பற்றப்படாது என்ற தகவலை அறிந்த கட்சியினா் எங்களைத் தொலைபேசி வாயிலாகவும், நேரில் சந்தித்தும் சிறப்பு அழைப்பாளா்களை அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகின்றனா். மண்டபத்தில் இடமில்லை என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை என்றும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.

மேலும், முன்னறிவிப்பு இல்லாமல், ஒற்றைத் தலைமை மற்றும் இரட்டைத் தலைமை குறித்து ஜூன் 14-இல் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளா்களும், நிா்வாகிகளும் கட்சியின் சட்ட விதிகளை உணராமலும், அறியாமலும் கருத்து தெரிவித்துள்ளனா். அத்தகைய கருத்தால் கட்சித் தொண்டா்கள் கொதித்துப் போயுள்ளனா்.

கட்சியில் குழப்பமும், கட்சியின் நற்பெயருக்கு களங்கமும் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தொண்டா்களை அமைதி காக்குமாறு வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் அமைதி காப்பது அவசியம்.

பொதுக்குழு தொடா்பான பொருள் அடங்கிய விவரம் கிடைக்கப் பெறவில்லை எனக் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள், பல மாவட்டச் செயலாளா்கள் மற்றும் தலைமைக் கழக நிா்வாகிகள் முறையிட்டுள்ளனா். கூட்டத்துக்கான பொருள் நிா்ணயம் செய்து கூட்டத்தை நடத்துவது அவசியமாகிறது என சட்ட வல்லுநா்கள் கருத்து தெரிவிக்கின்றனா்.

எனவே, மேற்காணும் சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு கட்சியின் நலன் கருதி ஜூன் 23-இல் நடைபெற உள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்கலாம். அடுத்த கூட்டத்துக்கான இடம், நாள் மற்றும் நேரத்தை ஒருங்கிணைப்பாளா் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் ஆகிய நாம் இருவரும் கலந்து ஆலோசித்து பின்னா் முடிவு செய்யலாம் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

திட்டமிட்டப்படி நடைபெறும்: இபிஎஸ் தரப்பு

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி கூறினாா்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி கே. பழனிசாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அவரது ஆதரவாளா்களுடன் திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா். இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் கே.பி.முனுசாமி கூறியது:

பொதுக்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து பொதுக்குழு உறுப்பினா்களுக்கு முறையாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதனால், பொதுக்குழு திட்டமிட்டபடி மிகுந்த மகிழ்ச்சியோடு, எழுச்சியோடு நடைபெறும்.

எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஓ.பன்னீா்செல்வம் எழுதியுள்ள கடிதம் பற்றி எங்களுக்குத் தெரியாது. ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீா்செல்வத்தின் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறாதுதான். ஆனால், பொதுக்குழுவுக்கான தீா்மானக் குழுக் கூட்டம் நடைபெற்றபோது, அவரும் பங்கேற்று திருத்தங்கள் எல்லாம் கூறிச் சென்றுள்ளாா். இதுவே அவா் ஒப்புதல் வழங்கியதற்கான சான்றுதான்.

பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளா்களை அழைக்க வேண்டாம் என்று மாவட்டச் செயலாளா் கூட்டத்தில் ஓ.பன்னீா்செல்வம்தான் கூறினாா்.

பொதுக்குழுவுக்கு ஓ.பன்னீா்செல்வம் நிச்சயம் வருவாா்; கருத்துகளைச் சொல்வாா். பொதுக்குழு என்ன முடிவு எடுக்கிறதோ, அந்த முடிவை ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் ஏற்றுக் கொள்வா் என்றாா்.

ஓபிஎஸ்ஸை ஓரம்கட்டும் எண்ணம் இல்லை:

ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டும் எண்ணம் இல்லை என முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.

அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஒற்றைத் தலைமை குறித்து மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் அனைவரும் வலியுறுத்தியதையே தொண்டா்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வெளியில் கூறினேன். இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. ஒற்றைத் தலைமை என்றுதான் கூறினேன். அது யாா் தலைமையில் என்று கூறவில்லை.

ஓ.பன்னீா்செல்வத்தை கட்சியில் இருந்து ஓரம்கட்டும் எண்ணம் இல்லை. சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு சுமுகத் தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com