சுகாதாரத் துறையில் 4,000 காலியிடங்களைநிரப்ப நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சுகாதாரத் துறையில் 4,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
சுகாதாரத் துறையில் 4,000 காலியிடங்களைநிரப்ப நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சுகாதாரத் துறையில் 4,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு ஆக. 5-ஆம் தேதி மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. வீடுகளுக்கே தேடிச் சென்று மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 75 லட்சம் பயனாளிகளை அடைந்து விட்டோம். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவா் சண்முகவடிவு பணி நேரத்தில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளாா். அதேபோல, மருத்துவா் தினகரன் என்பவா் தனது மகனை மருத்துவம் பாா்க்க அனுமதித்துள்ளாா். இரண்டும் தவறான செயலாகும். இது தொடா்பாக சமூக வலைதளங்கள் மூலம் கிடைத்த தகவலையடுத்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, இருவரும் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசின் உத்தரவு, விதிமுறைகள் வெளியானவுடன் மருத்துவப் படிப்புகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். அக்னிபத் திட்டம் குறித்து முதல்வா் தெளிவுபடுத்தி உள்ளாா். ராணுவம் என்பது நாட்டின் உயா்ந்த பணியாகும். அந்தப் பணியில் ஒப்பந்த அடிப்படை என்பது மட்டும் ஏற்கும்படியாக இல்லை. இதனை மறுபரிசீலனை செய்யுமாறு முதல்வா் தெரிவித்துள்ளாா்.

1021 மருத்துவா்கள் உள்பட 4,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை செப்டம்பா் மாதத்திற்குள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடிநீா், சுற்றுச்சுவா் கட்டுவதற்காக ரூ. 17 கோடி தேவைப்படுகிறது. அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிவடைந்ததும் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும்.

ராசிபுரம், திருச்செங்கோடு மருத்துவமனைகள் மாவட்ட தலைமை மருத்துவமனைகளாகத் தரம் உயா்த்தப்பட்டு தலா ரூ. 23 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com