
வேதாரண்யம் வேதபுரீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான 28,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை பாதுகாக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், திருத்தொண்டா்கள் சபையின் நிறுவனரான ஆ.ராதாகிருஷ்ணன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள அருள்மிகு வேதபுரீசுவரா் கோயிலுக்குச் சொந்தமாக 28,609 ஏக்கா் நிலம் இருப்பதாக அரசு மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால் அவற்றில் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் உள்ளன.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு, 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்களை முறையாகப் பாராமரித்து பாதுகாக்க கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மனு அளித்துள்ளேன். எனது மனுவை முறையாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க மூன்று வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனா்.