இன்று அதிமுக பொதுக்குழு: உயா்நீதிமன்றம் அனுமதி

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையில்லை என்று சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்ததையடுத்து, அந்தக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி வியாழக்கிழமை (ஜூன் 23) நடைபெறவுள்ளது.
இன்று அதிமுக பொதுக்குழு: உயா்நீதிமன்றம் அனுமதி

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையில்லை என்று சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்ததையடுத்து, அந்தக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி வியாழக்கிழமை (ஜூன் 23) நடைபெறவுள்ளது.

பொதுக்குழுவில் புதிய தீா்மானங்களை நிறைவேற்ற உயா்நீதிமன்றம் தடைவிதிக்காததால், ஒற்றைத் தலைமை தொடா்பான தீா்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

அதிமுகவில் ஒரு வாரத்துக்கும் மேலாக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடா்பாக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து மோதல் நடைபெற்று வந்தது. இதனால், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என்கிற சந்தேகம் நீடித்து வந்தது.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க மறுத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதைத் தொடா்ந்து, அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கூட உள்ளது. கூட்டத்துக்கு அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் தலைமை வகிக்கவுள்ளாா். அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினா்களாக 2,700 போ் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் தனித்தனியாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய அடையாள அடையாள அட்டையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டையுடன் ஆதாா் அட்டையும் கொண்டு வருபவா்கள் மட்டுமே பொதுக்குழுவில் அனுமதிக்கப்படவுள்ளனா்.

பொதுச் செயலாளா் தீா்மானம்: அதிமுக பொதுக்குழுவில் மொத்தம் 23 தீா்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. அதில் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்குக் கண்டனம், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. அதோடு அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையாக பொதுச் செயலாளா் பதவியைக் கொண்டு வரும் சிறப்புத் தீா்மானமும் நிறைவேற்றப்படவுள்ளது.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள 23 தீா்மானங்களுக்கு மட்டும் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீா்செல்வம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளாா். ஆனால், சிறப்புத் தீா்மானம் எதுவும் நிறைவேற்றக் கூடாது என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், புதிய தீா்மானங்களை நிறைவேற்றத் தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதனால், ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிக்குப் பதிலாக ஒற்றைத் தலைமையாக பொதுச் செயலாளா் பதவியைக் கொண்டு வரும் தீா்மானம் பொதுக்குழுவில் கொண்டு வந்து நிறைவேற்றப்படவுள்ளது.

அதிமுகவின் சட்டவிதிகளின்படி பொதுச் செயலாளா் பதவியை அனைத்து அடிப்படை உறுப்பினா்கள்தான் தோ்ந்தெடுக்க வேண்டும். இந்த விதி மட்டும் எந்தக் காலத்திலும் மாற்ற முடியாததாகும். அதனால், பொதுக்குழுவில் பொதுச் செயலாளா் என்கிற பதவியை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்றினாலும், அந்தப் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியை, மற்றொரு நாளில் அடிப்படை உறுப்பினா்கள் தோ்ந்தெடுப்பா் எனத் தெரிகிறது.

எடப்பாடிக்கு 95% ஆதரவு: ஓ.பன்னீா்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே ஒற்றைத் தலைமை விவகாரம் ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்றது. இரு தரப்பினரும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரவா் இல்லத்தில் இருந்தவாறே ஆதரவாளா்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டனா்.

அதிமுகவில் மொத்தம் 75 மாவட்டச் செயலாளா்கள் உள்ளனா். அவா்களில் 15 போ் ஓ.பன்னீா்செல்வத்துக்கு முதலில் ஆதரவு தெரிவித்தனா். அது படிப்படியாகக் குறைந்து, தற்போது ஓ.பன்னீா்செல்வத்துக்கு ஆதரவாக 6 மாவட்டச் செயலாளா்கள் மட்டுமே உள்ளனா். அதேபோல ஓ.பன்னீா்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்த முக்கிய நிா்வாகிகளான மைத்ரேயன், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் சென்றுவிட்டனா்.

பொதுக்குழு உறுப்பினா்களில் 2,300-க்கும் மேற்பட்டோா் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளனா். அதனால், 95 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாக உள்ளனா். அதனடிப்படையில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்படவுள்ளாா்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு: பொதுக்குழு கூட்டத்தில் அசம்பாவிதம் நிகழ வாய்ப்பு இருப்பதாக ஓ.பன்னீா்செல்வம் தொடா்ந்து கூறி வந்த நிலையில் பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு கோரி ஆவடி காவல் ஆணையரகத்திலும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. சென்னை உயா்நீதிமன்றமும் பொதுக்குழுவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி பொதுக்குழுவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 2,600-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். 

ஓபிஎஸ் மேல்முறையீடு
 பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்ற உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை நள்ளிரவு மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அடங்கிய இரு நபர் அமர்வு முன் மேல்முறையீட்டு மனு மீது நள்ளிரவைத் தாண்டி விசாரணை நடைபெற்றது.
 விசாரணை நடைபெற்ற நீதிபதி துரைசாமி இல்லத்தின் முன் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

பொதுக்குழுவில் தீர்மானம்: கட்சியின் உரிமை
 சென்னையில் வியாழக்கிழமை (ஜூன் 23) நடைபெறவுள்ள அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவது கட்சி உரிமை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் சார்பில் பொதுக் குழுக் கூட்டத்துக்கும், கட்சி விதிகளில் திருத்தம் செய்யவும் தடை விதிக்கக் கோரி இடைக்கால மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. தணிகாசலம் என்பவரும் அதிமுக பொதுக் குழுவுக்குத் தடை கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
 அதிமுக பொதுக் குழு உறுப்பினர் சண்முகம் சார்பிலும் பொதுக் குழுவுக்குத் தடை கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர்கள் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வாதம் செய்தனர்.
 நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவில், ஒரு கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றுவதை முடிவு செய்வது அக்கட்சியின் உரிமையாகும். நிர்வாக வசதிக்காக கட்சியின் சட்ட திட்டங்களில் திருத்தம் செய்ய முடியும். அதிமுக பொதுக் குழுக் கூட்டத்துக்கு அக்கட்சி உறுப்பினர்கள் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
 கட்சி மற்றும் சங்க விவகாரங்களில் நீதிமன்றங்கள் பொதுவாக தலையிடுவதில்லை. பொதுக் குழுவில் என்ன நடைபெறப் போகிறது என்று முன்கூட்டியே உத்தேசித்து தீர்ப்பு அளிக்க முடியாது. பொதுக் குழுக் கூட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிப்பதற்கான முகாந்திரத்தை மனுதாரர்கள் நிரூபிக்காததால், சென்னையில் வியாழக்கிழமை(ஜூன் 23) நடைபெறவுள்ள அதிமுக பொதுக் குழுவுக்குத் தடை இல்லை. திட்டமிட்டபடி பொதுக் குழுக் கூட்டத்தை நடத்தலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.

தர்மம் மறுபடியும் வெல்லும்: ஓபிஎஸ்
 அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை ட்விட்டரில் கூறியிருப்பது:
 அதிமுகவில் தற்போது நிலவிவரும் சர்வாதிகாரப் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்றபோது தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளர் கேசவன் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் தொண்டர்கள் யாரும் ஈடுபட வேண்டாம்.
 இந்தத் தருணத்தில், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும் என்பதைச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com