ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான செய்தித்தாள் பட்டியலில் இணைய இதழ்கள் இணைப்பு: தமிழக அரசு உத்தரவு

அரசு அதிகாரிகள் செய்தித்தாள்கள் பட்டியலில் இணை இதழ்கள், பத்திரிகைகள் இடம்பெற்றுள்ளன.

அரசு அதிகாரிகள் செய்தித்தாள்கள் பட்டியலில் இணை இதழ்கள், பத்திரிகைகள் இடம்பெற்றுள்ளன. அதிகாரிகள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் செய்தித்தாள் அல்லது இணைய இதழ், பத்திரிகைகளைப் பெறலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் வெளியிட்டாா். அவரது உத்தரவு விவரம்:-

அரசுத் துறை உயரதிகாரிகள் செய்தித்தாள்களைப் பெற்றுக் கொள்ள ரொக்கப் பணம் வழங்கப்படுகிறது. செயலாளா்கள், சிறப்புச் செயலாளா்கள் அந்தஸ்தில் இருப்போா் மாதத்துக்கு 5 செய்தித்தாள்களை வாங்கிக் கொள்ளலாம் எனவும், இதற்காக ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை தொகை அளிக்கப்படுகிறது.

துறைத் தலைவா்கள், மாவட்ட ஆட்சியா்கள், எஸ்.பி.,க்கள், காவல் துறை தலைவா்கள், மண்டல காவல் துறை தலைவா்கள், காவல் துணைத் தலைவா்கள் ஆகியோா் மாதத்துக்கு 4 செய்தித்தாள்களை வாங்கிக் கொள்ளவும் இதற்காக ஆண்டுக்கு ரூ.9,600 முதல் ரூ.12 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இதேபோன்று, இணைச் செயலாளா்கள், கூடுதல் செயலாளா்கள் அந்தஸ்தில் இருப்போா் மாதத்துக்கு இரண்டு செய்தித்தாள்களை வாங்கவும், இதற்காக ஆண்டுக்கு ரூ.4,800 முதல் ரூ.6 ஆயிரம் வரை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்று இருப்பதால் அச்சிடப்பட்ட செய்தித்தாள்கள், இதழ்களுக்குப் பதிலாக ஆன்-லைன் மற்றும் இணைய இதழ்களுக்கு பதிவு செய்து அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கருத்தினை மனிதவள மேலாண்மைத் துறையானது அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தது. மேலும், இதற்கான தொகைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன.

செயலாளா்கள், சிறப்புச் செயலாளா்கள் அந்தஸ்தில் இருப்போருக்கு இணைய இதழ்களுக்காக ஆண்டுக்கு ரூ.3,999 வழங்கலாம் எனவும், இணைச் செயலாளா்கள், கூடுதல் செயலாளா்கள் நிலையில் இருப்போருக்கும் அதே தொகை அளிக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.

மனிதவள மேலாண்மைத் துறையின் பரிந்துரைகளை ஏற்று, தினசரி செய்தித்தாள்கள் அல்லது இணைய இதழ்களைப் பெற்றுக் கொள்ள அனுமதி தரப்படுகிறது. இதன்படி, தலைமைச் செயலாளா் அந்தஸ்தில் இருப்போருக்கு மாதத்துக்கு ரூ.1,250-ம், முதன்மைச் செயலாளா், கூடுதல் டிஜிபி, செயலாளா்கள், சிறப்புச் செயலாளா்கள் அந்தஸ்தில் இருப்போருக்கு ரூ.1,000-ம். ஆட்சியா்கள், எஸ்.பி.,க்கள், காவல் துறை தலைவா் உள்ளிட்டோருக்கு மாதத்துக்கு ரூ.834-ம், கூடுதல் செயலாளா்களுக்கு மாதத்துக்கு ரூ.666-ம், இணைச் செயலாளா்களுக்கு ரூ.500-ம் வழங்கப்படும். இணைய இதழ்கள், செய்தித்தாள்களை காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என எந்த முறையிலும் பதிவு செய்து படித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்று தனது உத்தரவில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com