விரைவில் பிளஸ் 1 முடிவு: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 மதுரை நாகமலைப்புதுக்கோட்டையில் உள்ள பில்லர் மையத்தில் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கான நிர்வாகத்திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
 பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது:
 தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக குழந்தைகளுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் "எண்ணும் எழுத்தும்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி 2025-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் உள்ள 8 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளும் எழுத்தறிவும், எண்ணறிவும் பெற வேண்டும் என்பதை இலக்காக கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 தேர்வு முடிவுகள், மதிப்பெண்களால் மட்டுமே ஒரு குழந்தையின் தனித்திறமையை அளவிட முடியாது. எனவே பெற்றோர் தங்களது குழந்தைகளை பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டு மன அழுத்தம் ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மனவள ஆலோசனை வழங்குவதற்காக ஒவ்வொரு பள்ளிகளிலும் வழிகாட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக 14417, 1098 போன்ற கட்டணமில்லா தொடர்பு எண்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
 தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட 10 விதமான பொருள்களை இலவசமாக வழங்கி வருகிறது. இந்தப் பொருள்களை கட்டணத்துக்காக விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக் கட்டடங்களில் சேதமடைந்த, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் கண்டறியப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் நான்கு நாள்களில் வெளியிடப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com