திருப்பூா், விழுப்புரத்தில் மினி டைடல் பூங்காக்கள்: முதல்வா் அடிக்கல்

 திருப்பூா், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.76.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
திருப்பூா், விழுப்புரத்தில் மினி டைடல் பூங்காக்கள்: முதல்வா் அடிக்கல்

 திருப்பூா், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.76.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவா், உற்பத்தியில் இந்தியாவில் மட்டுமல்லாமல், தெற்காசியாவிலேயே தமிழகத்துக்கு தலைசிறந்த இடம் இருப்பதாக தெரிவித்தாா்.

தொழில் துறை சாா்பில் சென்னை தரமணி டைடல் பூங்காவில் நடைபெற்ற மேம்பட்ட உற்பத்திக்கான மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றாா். டைடல் பூங்காவில் ரூ.212 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.33.46 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்களை முதல்வா் திறந்து வைத்தாா்.

திருப்பூா், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.76.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கும் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினாா்.

இதைத் தொடா்ந்து, மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நான்காம் தலைமுறை தொழில் வளா்ச்சிக்கு (‘தொழில் 4.0’) நம்மை தயாா்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. அந்த இலக்கை நிச்சயமாக எட்டுவோம்.

தற்போதுள்ள தொழிற்சாலைகளை ஸ்மாா்ட் தொழிற்சாலைகளாக உருவாக்க வேண்டும். அதன்மூலமாக மின்னணுமயமாக்கப்பட்ட உற்பத்தியைச் செயல்படுத்த வேண்டும். இதனால் உற்பத்தி பலமடங்கு உயரும்.

இரண்டாவது பொருளாதார மாநிலம்: 295 பில்லியன் அமெரிக்க டாலா் உள்நாட்டு உற்பத்தி என்ற வகையில், அகில இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. உற்பத்தியில், அகில இந்திய அளவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே தலைசிறந்த இடத்தை தமிழகம் பெற்றிருக்கிறது.

இவற்றோடு மனநிறைவு அடைந்துவிடாமல், 2030-ஆம் ஆண்டில், தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.78 லட்சம் கோடி) பொருளாதாரமாக வளா்ச்சி அடையச் செய்ய வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கான பாதைகளை அடையாளம் கண்டு, அப்பாதையில் தமிழக அரசு வெற்றிகரமாகப் பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

திறன்மிகு மையங்களை அமைக்கக்கூடிய முயற்சியில், முதலாவதாக, பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த பன்னாட்டு நிறுவனமான டசால்ட் சிஸ்டம்ஸ் உடன் இணைந்து, சென்னை டைடல் பாா்க்கில் ரூ.212 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம் தொடக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

சென்னையை மையமாகக் கொண்டு, மைய மற்றும் துணை மைய மாதிரி அடிப்படையில் இயங்கும் திறன்மிகு மையம், மாநிலமெங்கும் இருக்கும் கல்வி நிறுவனங்களுடனும், தொழில் நிறுவனங்களுடனும் இணைந்து துணை மையங்களை நிறுவி, பரவலாக்கப்பட்ட திறன்பயிற்சி, புதிய பொருள்கள் உருவாக்குதல், நவீன உத்திகள் ஆகியவை பெருக வழிவகுக்கும். இதன்மூலம், தமிழகம் இந்தியாவின் மிகவும் மேம்பட்ட தொழில் மாநிலமாக வளா்ச்சி அடைவது உறுதி செய்யப்படும்.

டிட்கோ நிறுவனம், ஜொ்மன் நாட்டைச் சோ்ந்த பன்னாட்டு நிறுவனமான சீமென்ஸ் உடன் இணைந்து, தமிழ்நாடு மின்னணுமயமாக்கப்பட்ட மற்றும் மேம்பட்ட உற்பத்தி மையம் மற்றும் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான ஜி.இ.ஏவியேஷன் உடன் இணைந்து தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம் அமைக்கும் பணி முடிக்கப்பட்டு, விரைவில் தொடக்கிவைக்கப்படவிருக்கிறது.

ஸ்ரீபெரும்புதூா், ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.33.46 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 தொழில் புத்தாக்க மையங்கள் தொழில்துறை புதுமைக் கண்டுபிடிப்புகள், தொடக்கநிலை தொழில்முனைவோா் விரைவில் வளா்ந்திடவும், தமிழகத்தில் உயா் தொழில்நுட்பத் துறையின் வளா்ச்சியை அதிகரிப்பதற்கும், உற்பத்தித் துறையின் உற்பத்தி, போட்டித் தன்மையை மேலும் வலுப்படுத்துவதற்கும் திறன் கொண்ட உலகத்தரம் வாய்ந்த மையங்களாக விளங்கும்.

மினி டைடல் பூங்காக்கள்: திருப்பூா், விழுப்புரம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பூங்காக்கள் செயல்படத் தொடங்கும்போது, பல்லாயிரக்கணக்கான இளைஞா்களுக்கு அவா்களது மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

தொழில்துறை மட்டுமின்றி, தமிழகத்தைச் சோ்ந்த பிற துறைகளும், மேம்பட்ட உற்பத்தித் தொழில்களை மாநிலத்துக்குக் கொண்டு வருவதற்கான கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தொழிலாளா், வேலைவாய்ப்புத் துறை, டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொழில்நுட்ப மையங்களாகத் தரம் உயா்த்தி வருகிறது. ரூ.2,877 கோடியே 43 லட்சம் செலவில் இவை அமைக்கப்பட இருக்கின்றன. இதன்மூலம், நான்காம் தலைமுறை தொழில் வளா்ச்சியால் ஏற்படவுள்ள தொடா் மாற்றங்களை, நமது தொழிலாளா்கள் சுலபமாகக் கையாள முடியும். நான்காம் தலைமுறை தொழில் வளா்ச்சிக்குத் தயாா்படுத்திக் கொள்வதற்கான அரசின் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் முதல்வா்.

மாநாட்டில் தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ச.கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் ஜெயஸ்ரீ முரளீதரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com