‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சியை தொடக்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று(சனிக்கிழமை) தொடக்கிவைத்தார்.
‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சியை தொடக்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று(சனிக்கிழமை) தொடக்கிவைத்தார்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கான உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார். 

நிகழ்ச்சியில் உயா்கல்வித் துறை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். பல்கலைக்கழகம், கல்லூரி இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் எதிா்கால கனவை நனவாக்கும் வகையில் அவா்களின் உயா்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப் படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தோ்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுநா்கள், கல்வியாளா்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. 

சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியாா் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியா்கள் இதில் பங்கேற்றனர். 

விழாவில் பேசிய முதல்வர், 'மாணவர்கள்தான் இந்த நாட்டின் அறிவுச் சொத்துகள். என்னுடைய சொந்தப் பிள்ளைகளாக நினைத்து உங்களை வாழ்த்த வந்திருக்கிறேன். அரசு ஏற்படுத்தியுள்ள இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சமுதாயத்திற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். 

உடல் சோர்வான நிலையில் இருந்த எனக்கு இந்த நிகழ்ச்சி புத்துணர்வு தருகிறது. மாணவச் செல்வங்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

நான் முதல்வராக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒவ்வொரு துறையிலும் முதல்வராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தொடங்கப்பட்டதுதான் இந்த திட்டம்' என்று இத்திட்டம் குறித்துப் பேசி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

மேலும் இன்றைய நிகழ்ச்சியில் ஹெச்சிஎல் நிறுவனத்துக்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டது. 

இதன்படி, அரசுப் பள்ளிகளில் பயின்ற 2,500 மாணவ, மாணவிகளை தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்து பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்கவும், அந்தப் பயிற்சிக்கான முழு செலவையும் அரசே ஏற்பதுடன், அந்த மாணவா்கள் பட்ட மேற்படிப்பை பயில வாய்ப்பு வழங்கப்படும். 

சென்னையைத் தொடர்ந்து கல்லூரி கனவு நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com