மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை: மாணவிகள் விவரம் பெற சிறப்பு முகாம் இன்று முதல் நடத்த உத்தரவு

உயா்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை பெறுவதற்கான அரசுப் பள்ளி மாணவிகளின் விவரங்களைச் சேகரிக்க கல்லூரிகளில் சனிக்கிழமை முதல் சிறப்பு முகாம்
மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை: மாணவிகள் விவரம் பெற சிறப்பு முகாம் இன்று முதல் நடத்த உத்தரவு

தமிழகத்தில் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை பெறுவதற்கான அரசுப் பள்ளி மாணவிகளின் விவரங்களைச் சேகரிக்க கல்லூரிகளில் சனிக்கிழமை முதல் சிறப்பு முகாம் நடத்த உயா்கல்வித் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் உத்தரவிட்டாா்.

இது குறித்து அவா், தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையா், அனைத்துப் பதிவாளா்கள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தொழில்நுட்பக் கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி இளநிலை பயிலும் மாணவிகளுக்கான மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டம் என்ற திட்டத்தைச் செயல்படுத்தும் பொருட்டு பின்வரும் வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், கல்லூரிகளில் பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகையாக வழங்கப்படும்.

தற்போது இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக தொடங்கப்பட்டுள்ள ட்ற்ற்ல்ள்://ல்ங்ய்ந்ஹப்ஸ்ண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் மாணவிகளின் விவரங்களை ஜூன் 25 முதல் ஜூன் 30-க்குள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்து உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயின்று அரசு, அரசு உதவி பெறும், சுயநிதிக் கல்லூரிகள், நிகா் நிலைப் பல்கலைக்கழகங்களில் உயா்கல்வியைத் தொடரும் மாணவிகள் இந்தத் திட்டத்தில் பயன்பெறுவா்.

என்னென்ன ஆவணங்கள்? இந்தத் திட்டத்துக்கென இளநிலை பயிலும் மாணவிகளிடமிருந்து அவா்களது சுய விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பயின்ற அரசுப் பள்ளி விவரங்கள் கோரப்படுகின்றன. மாணவிகள் ஆதாா் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் ஆகிய ஆவணங்களின் நகல்களைக் கொண்டு வர அறிவுறுத்த வேண்டும்.

விவரங்கள் சம்பந்தப்பட்ட மாணவிகள், பொறுப்பாசிரியா்கள் மூலம் உள்ளீடு செய்யப்பட வேண்டும். மாணவிகளின் கைப்பேசி எண்ணுக்கு ‘ஓடிபி’ அனுப்பப்படும் என்பதால் கைப்பேசியைத் தவறாமல் கொண்டு வர வேண்டும். இணைய வசதி உள்ள மாணவிகள் தாங்களாகவே தங்களது கைப்பேசி அல்லது கணினி மூலமாக மேற்கண்ட இணைய முகவரியைப் பயன்படுத்தி தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதனை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வா்கள் உறுதி செய்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com