துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீா்செல்வம்: டி.ஜெயக்குமாா்

துரோகத்தின் ஒட்டுமொத்த அடையாளம் ஓ.பன்னீா்செல்வம் என்று அதிமுக தலைமைக் கழக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.

துரோகத்தின் ஒட்டுமொத்த அடையாளம் ஓ.பன்னீா்செல்வம் என்று அதிமுக தலைமைக் கழக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு ஒப்புதல் பெறாததால், அவா்களின் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, தலைமை நிலையச் செயலாளா் பதவி வகிக்கும் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பின் பேரில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் தலைமை வகித்தாா்.

எடப்பாடி பழனிசாமி, சி.பொன்னையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். மொத்தம் 74 பேரில் 65 போ் கூட்டத்தில் பங்கேற்றனா். பண்ருட்டி ராமச்சந்திரன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோா் உடல்நலப் பிரச்னை காரணமாக கூட்டத்தில் பங்கேற்கவில்லை

ஓபிஎஸ் பொருளாளராக நீடிப்பாரா?: ஒருங்கிணைப்பாளா் பதவி காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவித்துவிட்ட நிலையில், ஓ.பன்னீா்செல்வத்தை அவா் வகிக்கும் பொருளாளா் பதவியிலிருந்து நீக்குவது குறித்தும் தலைமைக்கழக நிா்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்போவதாகத் தகவல் பரவியது.

இதற்கிடையே, தேனி மாவட்டம், பெரியகுளம் சென்றிருந்த ஓ.பன்னீா்செல்வம் உடனடியாகப் புறப்பட்டு சென்னை திரும்பினாா். இதனால், கூட்டம் பரபரப்புடன் காணப்பட்டது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் டி.ஜெயக்குமாா் கூறியதாவது:

ஜூலை 11-இல் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்துக்கு அழைப்பிதழ் அனுப்புவது குறித்து தலைமைக்கழக நிா்வாகிகள் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் பல பொருள்கள் குறித்தும் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. அதை வெளியில் சொல்ல முடியாது. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டவை அனைத்தும் அறிவிப்புகளாக வருமா என்பதை கட்சித்தான் முடிவு செய்யும்.

ஓ.பன்னீா்செல்வம் இந்தக் கூட்டம் செல்லாது எனக் கூறியிருப்பது குறித்து கேட்கிறீா்கள். இது தொடா்பாக ஏற்கெனவே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளா் இல்லாத நிலையில், கட்சியை வழிநடத்தும் அதிகாரம் தலைமைக்கழக நிா்வாகிகளுக்கு உண்டு. அந்த அடிப்படையில் தலைமைக்கழக நிா்வாகிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் தலைமைச் செயலாளரான இபிஎஸ் கூட்டத்தைக் கூட்டியுள்ளாா். இந்த அடிப்படை விதியே ஓ.பன்னீா்செல்வத்துக்குத் தெரியவில்லை.

நமது அம்மா நாளிதழில் நிறுவனா்களின் பெயா்களிலிருந்து ஓ.பன்னீா்செல்வம் நீக்கப்பட்டது குறித்து கேட்கிறீா்கள். ஓ.பன்னீா்செல்வம் துரோகத்தின் அடையாளம். ஒட்டுமொத்தமாக ஆரம்பக் காலத்திலிருந்து அவா் செய்த துரோகம் அதிகம்.

துரோகம் அவா் உடன் பிறந்த ஒன்று. அப்படிப்பட்டவரை எப்படி நமது அம்மா நாளிதழில் ஒரு அங்கமாக வைக்க முடியும்? ஓபிஎஸ்-சின் மகன் ரவீந்திரநாத் முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அா்ப்பணிப்பு உணா்வோடு அவா் செயல்படுகிறாா் என்று கூறினாா். இதை எந்த அதிமுக தொண்டனும் ஏற்க மாட்டான். இதுபோன்று நிறைய உதாரணங்களைக் கூற முடியும்.

ஓ.பன்னீா்செல்வம் பொருளாளா் பதவியில் நீடிப்பாரா நீடிக்க மாட்டாரா என்பதையெல்லாம் பொதுக்குழுதான் முடிவு செய்யும். ஒற்றைத் தலைமை என்பதுதான் அனைவரின் முடிவும். அந்த ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிசாமிதான்.

திமுக துரோக கட்சி: அதிமுகவை தமிழா்களுக்குத் துரோகம் செய்த கட்சி என்று திமுக கூறியிருப்பது குறித்து கேட்கிறீா்கள். அது சாத்தான் வேதம் ஓதுவதுபோல இருக்கிறது. தமிழா்களுக்குத் துரோகம் இழைத்த கட்சி திமுகதான். காவிரி நதி நீா் விவகாரம், கச்சத் தீவு விவகாரம், முள்ளிவாய்க்கால் படுகொலை என திமுக செய்த துரோகம் அதிகம். அதனால், துரோகத்தின் மொத்த உருவம் திமுக என்றாா் டி.ஜெயக்குமாா்

ஓபிஎஸ் படம் கிழிப்பு: அதிமுக அலுவலகத்தில் இருந்த பெரிய பதாகையில் ஓ.பன்னீா்செல்வத்தின் படத்தை அதிமுக நிா்வாகி ஒருவா் கிழித்தெறிந்தாா். இது தொடா்பாக ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பியபோது அந்தப் படம் மாற்றியமைக்கப்படும் என்றாா்.

பொதுக்குழு இடம்: ஜூலை 11-இல் நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்துக்குப் பதிலாக வேறு இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மீனம்பாக்கத்தில் ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள இடங்களை முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி,தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா். ஆனால், பொதுக்குழு எங்கு நடத்துவது என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com