முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன், அவரது மனைவி, மகன்கள் உள்பட 5 போ் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து குவித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் விரைவாக

அதிமுக முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன், அவரது மனைவி, மகன்கள் உள்பட 5 போ் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து குவித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், உயா்கல்வித் துறை அமைச்சராக இருந்தவா் கே.பி.அன்பழகன். தருமபுரி பாலக்கோடு தொகுதியில் 2001 முதல் தற்போது வரை எம்எல்ஏவாக இருந்து வருகிறாா். இவா், அமைச்சராக இருந்த 2016 முதல் 2021 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக கிருஷ்ணமூா்த்தி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.

இதனடிப்படையில் தருமபுரி லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கே.பி அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா். கே.பி.அன்பழகன் தோ்தலின்போது கணக்கில் காட்டிய சொத்துகளின் மதிப்பை வைத்து விசாரணை நடத்தினா்.

அப்போது, அவா் பெயரிலும், அவரது உறவினா் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 மதிப்புள்ள சொத்துகள் சோ்த்திருப்பது தெரியவந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் புகாா்தாரரான கிருஷ்ணமூா்த்தி மேலும் ஒரு வழக்குத் தொடுத்தாா். அதில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே, விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமாா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி கே.பி.அன்பழகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com