
திருப்பாச்சேத்தி அருகேயுள்ள மார்நாடு ஸ்ரீ கருப்பன் கோயில்.
மானாமதுரை: மகா சிவராத்திரி நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள பிரசித்தி பெற்ற மார்நாடு கருப்பன் கோயிலில் தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் குவிந்தனர். மார்நாடு கருப்பன் கோயில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
மகா சிவராத்திரி நாளை முன்னிட்டு இக்கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு கருப்பண சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கருப்பணசாமியை குல தெய்வமாக வழிபடும் மக்கள் மற்றும் பிற பக்தர்கள் கார், வேன், ஆட்டோக்கள் மூலம் கோயிலில் திரண்டனர்.
இவர்கள் கருப்பனுக்கு உகந்த மலர் மாலைகளை சுவாமிக்கு காணிக்கையாக வழங்கினர். மூலவர் கருப்பன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கோயிலில் பொங்கல் வைத்தும், முடி கணிக்கை செலுத்தியும், கிடா வெட்டியும் வேண்டுதலை நிறைவேற்றி மார்நாடு கருப்பணை தரிசனம் செய்தனர்.