காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு மாமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட 50 பேருக்கும் புதன்கிழமை தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான பா.நாராயணன் பதவியேற்பு செய்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகா ராமகிருஷ்ணனுக்கு பதவியேற்பு செய்து வைக்கிறார் மாநகராட்சி ஆணையரும்,தேர்தல் அலுவலருமான பா.நாராயணன்.
காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகா ராமகிருஷ்ணனுக்கு பதவியேற்பு செய்து வைக்கிறார் மாநகராட்சி ஆணையரும்,தேர்தல் அலுவலருமான பா.நாராயணன்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு மாமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட 50 பேருக்கும் புதன்கிழமை தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான பா.நாராயணன் பதவியேற்பு செய்து வைத்தார்.

பெருநகராட்சியாக இருந்து வந்த காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு மாமன்ற உறுப்பினர்களாக 50 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். மொத்தம் உள்ள 51 வார்டுகளில் 36-வது வார்டு உறுப்பினர் வே.ஜானகிராமன் அண்மையில் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அந்த வார்டில் மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 50 வார்டுகளுக்கான தேர்தல் நடைபெற்று அதில் வெற்றி பெற்றவர்கள் விபரம் பிப்.22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது அறிவிக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்களுக்கான பதவியேற்பு விழா காஞ்சிபுரம் மாநகராட்சி எதிர்புறம் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது.

பதவியேற்பை முன்னிட்டு அண்ணா அரங்கம் புதுப்பிக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பதவியேற்பு விழாவிற்கு மக்களவை உறுப்பினர் ஜி.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி ஆணையரும்,தேர்தல் அலுவலருமான பா.நாராயணன் மாமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அழைத்து பதவியேற்பு உறுதிமொழியை வாசித்தார். 

இதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக மேடைக்கு வந்து உறுதிமொழியை வாசித்து பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழாவில் சமூக சேவகரும், தொழிலதிபருமான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், திமுக நகரச் செயலாளர் சன்பிராண்ட் சேகர், மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பதவியேற்கும் போது திமுக உறுப்பினர்கள் பலரும் திமுக தலைவர் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், மாவட்ட செயலாளர் க.சுந்தர் ஆகியோர் வாழ்க என்றும், அதிமுக உறுப்பினர்கள் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க என்றும் கூறி அதன் பின்னர் உறுதிமொழியை வாசித்து பதவியேற்றுக் கொண்டனர். காங்கிரஸ் உறுப்பினர் குமரகுருநாதன் ராகுல்காந்திக்கு வாழ்த்துக்கள் என்றும், பாமக உறுப்பினர்கள் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ்க்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் அகிலா தொல்.திருமாவளவன் வாழ்க என்றும் கூறி பதவியேற்றனர்.

ஒரே ஒரு வேட்பாளரான பாஜகவைச் சேர்ந்த விஜிதா பதவியேற்ற பின்னர் வந்தே மாதரம் என்று கூறினார். உறுதிமொழியை படிக்கத் தெரியாத சில உறுப்பினர்கள் ஆணையாளர் பா.நாராயணன் உறுதிமொழியை வாசிக்க அதைக் கேட்டு தொடர்ந்து சொல்லி பதவியேற்றனர். மாமன்ற உறுப்பினர்களாக 50 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com