முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கை வரலாறு காணாத முன்னுதாரணம்: ரவிக்குமார் எம்பி

கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்த
முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கை வரலாறு காணாத முன்னுதாரணம்: ரவிக்குமார் எம்பி

கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு இது வரலாறு காணாத முன்னுதாரணம் என எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான ஒதுக்கீட்டில் கூட்டணிக் கட்சினரை எதிர்த்து வெற்றிப் பெற்ற திமுகவினரைக் கண்டித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை விடுத்தார்.

அதில், ‘ நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது.

இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிகளவு மகிழ்ச்சியை அளித்தது.
அந்த மகிழ்ச்சியைக் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில்  சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறது.
அண்ணா சொன்ன "கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டில்"  மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கலைஞர் அடிக்கடி சொல்வார்கள். அந்தக் கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் கட்சித் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

கட்சித் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கட்சித் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கட்சியின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். மாவட்டச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார்.

அதைப் பாராட்டும் விதமாக விசிகவின் பொதுச்செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் ’வரலாறு காணாத முன்னுதாரணம். தமிழ்நாட்டின் வரலாறு இதுவரை கண்டிராத முன்னுதாரணத்தை திமுக தலைவர் அண்ணன் தளபதியார் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஏற்படுத்தியுள்ளார். தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ட்விட்டர் வாயிலாக விடுத்திருந்த வேண்டுகோளின் நியாயத்தை அங்கீகரித்து இந்த நடவடிக்கையை எடுத்து இந்த மகத்தான கூட்டணியில் மனக் கசப்பு நேராமல் பாதுகாத்திருக்கும் அண்ணன் அவர்களுக்கு நன்றி ’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com