சாமளாபுரம் பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு சுயேச்சையாகப் போட்டியிட்ட பழனிசாமி என்பவர் சாமளாபுரம் பேரூராட்சித் தலைவர் தேர்தலில் 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பழனிசாமி
பழனிசாமி

திருப்பூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு சுயேச்சையாகப் போட்டியிட்ட பழனிசாமி என்பவர் சாமளாபுரம் பேரூராட்சித் தலைவர் தேர்தலில் 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

சாமளாபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்த நிலையில், 15 ஆவது வார்டில் போட்டியிடுவதற்காக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் சீட் கேட்டிருந்தார்.

ஆனால், அந்த வார்டு வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் சுயேச்சையாகப் போட்டியிட்டார். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து பழனிசாமி நீக்கப்பட்டார்.

இந்த நிலையில்,சாமளாபுரம் பேரூராட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் திமுக 6 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், அதிமுக 4 வார்டுகளிலும், 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருந்தனர். இதில், 15 ஆவது வார்டில் போட்டியிட்ட பழனிசாமி திமுக வேட்பாளரை விட 53 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

இந்த நிலையில், திமுக சார்பில் 5 ஆவது வார்டில் வெற்றி பெற்ற வேலுசாமி பேரூராட்சித் தலைவர் வேட்பாளராக அக்கட்சித் தலைமை அறிவித்திருந்தது.

சாமளாபுரம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பேரூராட்சித் தலைவர் பதவிக்கு பழனிசாமியும், திமுக சார்பில் வேலுசாமியும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்தத் தேர்தலில் பேரூராட்சியின் 15 வார்டு உறுப்பினர்களும் பங்கேற்றனர். பழனிசாமிக்கு 8 வாக்குகளும், வேலுசாமிக்கு 6 வாக்குகளும் கிடைத்ததுடன், ஒரு வாக்கு செல்லாதவை என்று தெரிகிறது. இதைத்தொடர்ந்து, சாமளாபுரம் பேரூராட்சித் தலைவராக பழனிசாமி வெற்றி பெற்றதாக பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தகுமார் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com