அரியலூர் அதிசயம்: தங்கத்தினாலான கை காப்பின் ஒரு பகுதி கண்டெடுப்பு

அரியலூா் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில், தங்கத்தினாலான கை காப்பின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தங்கத்தினாலான கை காப்பின் ஒரு பகுதி
தங்கத்தினாலான கை காப்பின் ஒரு பகுதி

 
அரியலூா் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில், தங்கத்தினாலான கை காப்பின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தங்கத்தினாலான கை காப்பின் ஒரு பகுதி 7.920 கிராம் எடையுடையதாக இருப்பதாகவும் 4 மி.மீ. தடிமன் கொண்டதாகவும், இவ்விடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட முதல் காப்பர் மற்றும் தங்கம் கலந்த ஆபரணம் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்கை கொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில், இரண்டாம் கட்ட அகழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை அண்மையில் அனுமதி வழங்கியது. இதையடுத்து, இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை கடந்த பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து நடைபெற்று வரும் அகழாய்வில், சோழா் காலத்து கட்டடங்கள் இருந்ததற்கான சான்றாக பல்வேறு தொல்லியல் பொருள்கள் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தற்போது 10-க்கு 10 என்ற சதுரஅடி அளவில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு அரண்மனையின் சுற்றுச்சுவா், இரும்பிலான ஆணிகள், மண்பாண்ட விளிம்புகள் போன்ற பொருள்கள் கிடைத்துள்ளன. 

மேலும், தங்கத்தினாலான கைகாப்பு ஒன்று கடந்த 2 ஆம் தேதி கிடைத்துள்ளது. இது நான்கில் ஒரு பகுதியாகும். இதன் எடை சுமாா் 7.920 கிராம், நீளம் 4.9 மி.மீட்டரும், 4 மி.மீட்டா் தடிமனும் கொண்டுள்ளது. இவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தொடா்ந்து நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணியில் சிறு சிறு எலும்பு துண்டுகள் கிடைத்துள்ளன.

இந்த எலும்பு துண்டுகள் தொல்லியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவுக்கு பின்னரே இது மனிதா்களின் உடல் எலும்புகளா அல்லது மிருகங்களின் உடல் எலும்புகளா என தெரியவரும் என்று தொல்லியல் துறையினா் தெரிவித்தனா். தற்போது இங்கு 12 தொழிலாளா்கள் மட்டுமே அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

இந்த அகழ்வாராய்ச்சியில், சீன நாட்டில் பயன்படுத்தப்படும் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இந்த பானை ஓடுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருளானது இந்தியாவில் எங்கும் காணப்படவில்லை. சீனாவில் மட்டும் கிடைக்கும். இதன் மூலம், இங்கு இந்தியா - சீனா இடையே வர்த்தகம் நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com