
கடும் எச்சரிக்கையை கண்டு கொள்ளாத போட்டி கவுன்சிலர்கள்: என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?s
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்கள் அந்தப் பதவியிலிருந்து விலக வேண்டும், இல்லாவிட்டால் கட்சியிலிருந்து நீக்கப்படுவா் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையான எச்சரிக்கையை விடுத்தும், போட்டி வேட்பாளர்கள் இன்னும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்யாமல் உள்ளனர்.
ராஜிநாமா செய்வார்கள் எனத் தோன்றவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், திமுக உள்ளூர் தலைவர்கள் போட்டியிட்டு சில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளனர். இதனால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகள் கிடைக்காத கூட்டணிக் கட்சிகள், திமுக தலைமையிடம் முறையிட்டன. கூட்டணி கொள்கைக்கு உகந்ததாக இல்லை என்று குற்றம்சாட்டின.
திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள், மாவட்ட மற்றும் மாநில கட்சித் தலைவர்களின் அறிவுறுத்தல்களை கேட்கவில்லை. இதனால், இவ்விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினே நேரடியாக போட்டி வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றவா்கள் அந்தப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கட்சியிலிருந்து நீக்கப்படுவா் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரித்திருந்தார்.
ஆனால், இவற்றை போட்டி கவுன்சிலர்கள் இன்னும் கண்டுகொள்ளவில்லை.
மதிமுக தலைவர் வைகோவின் சொந்த ஊரான திருவேங்கடம் பேரூராட்சித் தலைவர் பதவி, மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கு திமுக கவுன்சிலர் போட்டியிட்டு பதவியைக் கைப்பற்றியுள்ளார்.
இது குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம், மதிமுக தென்காசி மாவட்ட செயலாளர் டி.எம். ராஜேந்திரன் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் முறையிடப்பட்டது. அவரும் சேர்மதுரையை அழைத்துப் பேசினார். ஆனால், அவர் பதவி விலக மறுத்துவிட்டார் என்கிறார்.
சேர்மதுரையிடம் பதவி விலகும் முடிவு குறித்து கேட்டபோது, தான் பதவி விலகுவது குறித்து சிந்திக்கவேயில்லை. இதுவரை இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஒருவேளை முடிவெடுத்தால் உங்களுக்குச் சொல்கிறேன் என்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட புளியங்குடி நகராட்சித் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வென்ற திமுகவைச் சேர்ந்த அந்தோனிசாமியும் பதவி விலகுவதாக இல்லை. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கட்சித் தலைமைக்கு எடுத்துச் சொல்லியும் இதுவரை எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என்கிறார்கள்.
இதுபோலவே, காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் போட்டியிட்டு வென்ற போட்டி திமுக கவுன்சிலர்கள் பற்றி புகார்கள் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.
முதல்வர் மு.க. ஸ்டாலின் சொன்ன பிறகும் பதவி விலகாத போட்டி கவுன்சிலர்கள் எத்தகைய நடவடிக்கை பாயும் என்ற அதிகரிப்பு அதிகரித்துள்ளது.