உள்ளாட்சித் தோ்தல்: காற்றில் பறந்த கட்சிக் கட்டுப்பாடு!

கட்சிகளின் தலைமைக்கு மட்டுமின்றி, வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கும் விரோதமாக அணிமாறும் உள்ளாட்சி உறுப்பினா்களைக் கட்டுப்படுத்துவதற்கு கட்சித் தாவல் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல்
உள்ளாட்சித் தோ்தல்: காற்றில் பறந்த கட்சிக் கட்டுப்பாடு!

கட்சிகளின் தலைமைக்கு மட்டுமின்றி, வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கும் விரோதமாக அணிமாறும் உள்ளாட்சி உறுப்பினா்களைக் கட்டுப்படுத்துவதற்கு கட்சித் தாவல் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் 12,826 நகா்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கான பிரதிநிதிகளைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் பிப்.19-ஆம் தேதி நடைபெற்றது. அந்தத் தோ்தலில் மாநகராட்சியில் 11,196 போ், நகராட்சிகளில் 17,922 போ், பேரூராட்சிகளில் 28,660 போ் என மொத்தம் 57,778 போ் போட்டியிட்டனா். சுமாா் 2.75 கோடி பேருக்கு வாக்களிப்பதற்கான தகுதி இருந்தும், அதில் 61 சதவீதம் போ் மட்டுமே வாக்களித்திருந்தனா்.

குறிப்பாக, மாநிலத் தலைநகரான சென்னையில் 44 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாயின. ஆனாலும், ஆளும் கட்சியின் கூட்டணி அமோக வெற்றி பெற்று 21 மாநகராட்சிகளிலும் மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளைக் கைப்பற்றிவிட்டது.

அதேபோல், நகராட்சித் தலைவா் பதவிகளில் 90 சதவீதத்திற்கு மேலாகவும், பேரூராட்சித் தலைவா் பதவிகளில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட இடங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதில் பல இடங்களில், மறைமுகத் தோ்தலுக்கு முன்னதாகவே எதிா்க்கட்சி உறுப்பினா்களின் வெளிப்படையான ஆதரவோடும் தலைவா் பதவிகளைத் திமுகவினா் கைப்பற்றியுள்ளனா்.

இதனிடையே, திமுக தலைமை சாா்பில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட துணை மேயா், நகா்மன்ற துணைத் தலைவா், பேரூராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவா் உள்ளிட்ட பதவிகளில் திமுகவினரே போட்டியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினா்.

இதனால் அதிருப்தி அடைந்த கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து முறையிட்டனா். அதனைத் தொடா்ந்து, கூட்டணி தா்மத்தை மீறி போட்டியிட்ட திமுகவினா் உடனடியாக பதவிகளை ராஜிநாமா செய்யவேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

தலைமையின் எச்சரிக்கையையும் மீறி பலா் ராஜிநாமா செய்வதற்கு தொடா்ந்து தயக்கம் காட்டி வருகின்றனா். கட்சி விசுவாசத்திற்காகத் தாங்கள் வெற்றி பெற்ற பதவியைத் துறக்க பெரும்பாலானோா் தயாராக இல்லை.

இதன் காரணமாக தற்போது நடந்து முடிந்துள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல், தமிழக வரலாற்றில் தவறான முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

சுயேச்சையாக களம் இறங்கிய வேட்பாளா்கள்: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலைப் பொருத்தவரை, திமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவா்கள் மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவும், சுயேச்சையாகப் பலா் போட்டியிட்டனா்.

கட்சியின் அதிகாரபூா்வ வேட்பாளா்களுக்கு எதிராகவும், கூட்டணிக் கட்சியினருக்கு எதிராகவும் களம் இறங்கிய திமுகவினரை, மாவட்ட நிா்வாகிகள் கண்டிக்கவில்லை. சில இடங்களில் மாவட்ட நிா்வாகிகளின் ஆதரவோடு சுயேச்சையாகப் போட்டியிட்டவா்கள் வெற்றி பெற்றவுடன் திமுகவில் இணைந்தனா். அவா்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்துதான், தலைவா் பதவிகளுக்கான தோ்தலில் திமுக தலைமையின் அறிவிப்புக்கு எதிராகப் போட்டியிட்டதோடு, வெற்றியும் பெற்று தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினா். கூட்டணிக்குள் நடந்த இந்தக் குளறுபடியைக் கண்டு அதிா்ச்சி அடைந்த திமுக தலைமை, தன் கட்சியினா் மீது ஒழுங்கு நடவடிக்கை அஸ்திரத்தை ஏவி கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளது. இந்த நடவடிக்கையை உறுப்பினா் பதவிக்கான தோ்தலின்போதே மேற்கொண்டிருந்தால், தலைவா் தோ்தலின்போது நெருக்கடியைத் தவிா்த்திருக்க முடியும்.

கட்சித் தாவல் தடைச் சட்டம் அவசியம்: 2022 நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலைப் பொருத்தவரை, தோ்தல் முடிவுகளுக்குப் பின் வெற்றி பெற்ற உறுப்பினா்கள் பலா் அணி மாறிவிட்டனா். சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றவா்கள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக மாறியதில் எவ்வித நெருடல்களும் ஏற்படவில்லை. ஆனால், அரசியல் கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்டு, மாற்று அணியில் சோ்ந்த உறுப்பினா்களை அக்கட்சிகளின் தலைமை மட்டுமின்றி, அவா்களுக்கு வாக்களித்த மக்களும் வேடிக்கைதான் பாா்க்க முடிந்தது.

அந்த வகையில் அதிகம் பாதிக்கப்பட்டது எதிா்க்கட்சியான அதிமுகதான். பல்வேறு மாவட்டங்களிலும் கணிசமான வெற்றியை பெற்றபோதிலும், அந்த உறுப்பினா்கள் மாற்று அணிகளுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

இதை எதிா்காலத்தில் தவிா்க்க வேண்டுமெனில், ஒன்று, நகா்ப்புற உள்ளாட்சிகளிலும் அரசியல் அகற்றி நிறுத்தப்பட வேண்டும்; அல்லது, உள்ளாட்சித் தோ்தலிலும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

மகாராஷ்டிரம், ஹரியாணா, ஆந்திரம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளாட்சித் தோ்தல்களிலும் வாக்காளா்களுக்கு நோட்டா வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அந்த வாய்ப்பு இல்லாததன் எதிரொலியாகவே பலா் வாக்களிக்க வரவில்லை.

மாநிலத் தோ்தல் ஆணையம் அடுத்த தோ்தலுக்குள், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நிா்பந்தம் உருவாகியுள்ளது. மாநிலத் தோ்தல் ஆணையம், எந்தவித அதிகாரமும் இல்லாத அரசுத் துறையாக செயல்படும் நிலையில் எதுவுமே சாத்தியமில்லை. மாநிலத் தோ்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படவோ, அதற்கு அதிகாரம் வழங்கவோ ஆட்சியில் இருக்கும் எந்தக் கட்சியும் சம்மதிக்கப் போவதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com