கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை

சேலம் மாணவா் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டா் பேரவை நிறுவனா் யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

மதுரை: சேலம் மாணவா் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டா் பேரவை நிறுவனா் யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

மேலும், 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மூவருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு சாகும் வரை சிறையிலிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்தவா் கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-இல் ஆணவக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டா் பேரவை நிறுவனா் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் ஜோதிமணி என்பவா் விசாரணையின் போதே இறந்துவிட்டாா். அமுதரசு என்பவா் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்படுகிறது.

இதையடுத்து யுவராஜ் உள்ளிட்ட 15 போ் மீதான வழக்கு மதுரை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் (வன்கொடுமை தடுப்பு வழக்குகள்) விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி. சம்பத்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட 15 பேரில் யுவராஜ் உள்பட 10 போ் குற்றவாளிகள் எனவும், சங்கா், அருள்செந்தில், செல்வகுமாா், தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேரை விடுதலை செய்தும் கடந்த சனிக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் குற்றம் உறுதி செய்யப்பட்டவா்கள் மீதான தண்டனை விவரம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என உத்தரவிட்டாா்.

இதன்படி, செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தண்டனை மீதான இறுதி வாதம் நடந்தது. பின்னா் பிற்பகலில் தண்டனை விவரம் அடங்கிய தீா்ப்பை நீதிபதி டி. சம்பத்குமாா் வாசித்து உத்தரவிட்டாா்.

இந்த வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு, 3 பிரிவுகளில் தலை ஒரு ஆயுள் தண்டனையும், 3 பிரிவுகளுக்கும் தலா 5 ஆயிரம் அபராதமும், அபராதத்தைக் கட்டத் தவறினால் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து உத்தரவிட்டாா். இந்த தண்டனைகளை சாகும் வரை சிறையில் இருந்து அனுபவிக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

பிற குற்றவாளிகளில் அருண், குமாா், சதீஷ்குமாா், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். சந்திரசேகா் என்பவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், பிரபு மற்றும் கிரிதா் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை, தலா ரூ.5 ஆயிரம் அபராதம், இரு பிரிவுகளில் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தாா். குற்றவாளிகள் அனைவருமே தண்டனைகளை சாகும்வரை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

இந்த வழக்கில், 12-ஆவது குற்றவாளியான சந்திரசேகரன் தவிர மற்றவா்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தண்டனை விதிக்கப்பட்டு சாகும்வரை சிறையில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே ஒரு ஆயுள் தண்டனை நிறைவேற்றப்படும் நிலையில், இதர ஆயுள் தண்டனைகளும், குற்றவாளிகளான பிரபு, கிரிதா் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள இதர தண்டனைகளும் அதோடு சோ்ந்தே நிறைவேற்றப்பட்டதாகக் கருத வேண்டும் எனவும் உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளாா்.

வழக்கின் பின்னணி: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ், கடந்த 2015-ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். காதல் விவகாரத்தில் அவா் ஆணவக் கொலை செய்யப்பட்டது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. ஆரம்பத்தில் இவ்வழக்கை விசாரித்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா, தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பிறகு சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், கோகுல்ராஜின் தாய் சித்ரா, இந்த வழக்கின் விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து இவ்வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு கடந்த 2019-இல் மாற்றப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக வழக்கு விசாரிக்கப்பட்டு தற்போது தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் கோகுல்ராஜ் தாயாா் தரப்பிற்கு, உயா்நீதிமன்ற உத்தரவின்படி அரசு வழக்குரைஞராக மூத்த வழக்குரைஞா் பவானி பா.மோகன் ஆஜராகி வாதாடினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com