கம்யூனிஸ்ட் பிரமுகர் கொலை வழக்கு: 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

பள்ளிபாளையம் அருகே கம்யூனிஸ்ட் பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் விரைவு நீதிமன்றம் திங்கள் கிழமை தீர்ப்பு வழங்கியது.
கொலை செய்யப்பட்ட வேலுசாமி.
கொலை செய்யப்பட்ட வேலுசாமி.

நாமக்கல்: பள்ளிபாளையம் அருகே கம்யூனிஸ்ட் பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் விரைவு நீதிமன்றம் திங்கள் கிழமை தீர்ப்பு வழங்கியது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ஹரகாரம் பகுதியை சேர்ந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் சி.வேலுசாமி. இவர் வசித்து வரும் பகுதியை  சேர்ந்த விசைத்தறி  பெண் தொழிலாளி  ஒருவர், சிவகுமார் என்வரிடம்  கந்துவட்டிக்கு பணம் வாங்கி இருந்தார்.  

இந்த நிலையில் அந்தப் பணத்தை திரும்ப செலுத்தாத தொழிலாளியின் மகளை மிரட்டி பாலியல் பலத்காரம் செய்து விடியோ எடுத்து  இணையதளத்தில் சிவகுமார் கும்பல் வெளியிட்டனர்.

இதனால் மனமுடைந்த பெண் தொழிலாளி, கிளைச் செயலாளர் வேலுசாமியிடம் புகார் தெரிவித்தார். அவர் பள்ளிபாளையம் காவல் நிலையம் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த மனுவில் விடியோவை நீக்கம் செய்ய வேண்டும்,  பாலியல் பலாத்காரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என புகார் அளித்தார்.

இதனால் கந்துவட்டி கும்பல் வேலுசாமியை  பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் திட்டம் தீட்டினர். கடந்த 2010ஆம் ஆண்டு வேலுசாமி பள்ளிபாளையம் காவல் நிலையம் சென்று விட்டு தனது வீட்டுக்குச் சென்றபோது கந்துவட்டி கும்பல் அவரை வெட்டி படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து வேலுசாமி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யக்கோரி தமிழகம் முழுவதும்  போராட்டம் நடைபெற்றது. அதன்படி சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் குற்றவாளிகளான  சிவகுமார், பூபதி. ராஜேந்திரன், மிலிட்டரி கணேசன, அருண், அன்பு, ஆமையன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.  இவ்வழக்கு விசாரணையின் போது அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதில்,  ஆமையன் தனது கூட்டாளிகளால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். காவிரி ஆற்றில் அவரது உடல் வீசப்பட்டது. இதில்  பூபதி என்பவர் தலைமறைவானார்.

இந்த வழக்கு விசாரணை 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அரசு வழக்குரைஞராக திருமலைராஜன் ஆஜராகி வாதிட்டார். உடனடியாக தீர்ப்பு வெளியிடக்கூடாது என பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன.

பின்னர் பாலியல் பலாத்கார வழக்கு தனியாகவும், வேலுசாமி கொலை வழக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.
இளம் பெண் பலாத்கார வழக்கில் கடந்த ஆண்டு நாமக்கல் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முக்கிய குற்றவாளியான ஆமையன் கொலை செய்யப்பட்டதால் முதல் குற்றவாளியான சிவக்குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 5 லட்சம் அபராதம் விதித்து  தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சிவக்குமார் தண்டனை பெற்று சிறையில் உள்ளார். மற்றவர்கள் ஜாமினில்  வெளியே உள்ள நிலையில்,   12 ஆண்டுகளாக நடந்து வந்த  இந்த கொலை வழக்கின் இறுதி விசாரணை நாமக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அன்று பிற்பகல் 3 மணி அளவில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சிவக்குமார், ராஜேந்திரன், அருண், கணேசன், அன்பு ஆகிய 5 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து அவர்கள் அனைவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் மொத்தமாக ரூ.20 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com