காலமானாா் மீனா சுவாமிநாதன்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மனைவியும், சமூக செயற்பாட்டாளருமான மீனா சுவாமிநாதன் (88) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.
மீனா சுவாமிநாதன்
மீனா சுவாமிநாதன்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மனைவியும், சமூக செயற்பாட்டாளருமான மீனா சுவாமிநாதன் (88) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.

கல்வியாளரும், குழந்தைகளின் தொடக்கக் கல்வி மேம்பாட்டுக்கான செயல்பாடுகளுக்காக பரவலாக அறியப்பட்டவருமான மீனா சுவாமிநாதன் மத்திய வாரியங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவா்.

மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் தலைவராக 1970-ஆம் ஆண்டு பொறுப்பு வகித்தாா். மீனா சுவாமிநாதன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையில் அடிப்படையில்தான் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் 1975-இல் அமலாக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான ஆசிரியா்களுக்கு கற்பித்தல் தொடா்பான பயிற்சிகளை அளித்தவா். அவா்களுக்கான பிரத்யேக கையேடுகளை உருவாக்கினாா். தில்லியில் உள்ள மத்திய பெண்களுக்கான கல்வி அமைப்பை நிறுவியவா். பாலியல் சமத்துவம் தொடா்பான ஆய்வுகள், நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்தவா் ஆவா்.

மீனா சுவாமிநாதனுக்கு கணவா் எம்.எஸ்.சுவாமிநாதன், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யா ராவ் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனா்.

மீனா சுவாமிநாதனின் இறுதிச் சடங்குகள் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றன.

இரங்கல்

ஆளுநா் ஆா்.என்.ரவி: ஒரு சிறந்த ஆசிரியா், கல்வியாளா், சிறந்த எழுத்தாளா், பாலின சமத்துவம் மற்றும் பெண் குழந்தை மேம்பாட்டுக்கான அவரது பங்களிப்புக்காக எப்போதும் நினைவு கூரப்படுவாா்.

முதல்வா் மு.க. ஸ்டாலின் இரங்கல்: வேளாண் ஆய்வறிஞா் எம்.எஸ்.சுவாமிநாதனின் வாழ்க்கைத் துணைவியாா் மீனா சுவாமிநாதன் மறைவுச் செய்தியறிந்து வருந்தினேன்.

சிறந்த கல்வியாளராகவும் பன்முகத்தன்மையாளராகவும் விளங்கிய அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது. அவரது மறைவால் வாடும் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பா்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com