ரூ. 1,588 கோடி முதலீட்டில் சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சாம்சங் நிறுவனத்தின் 1,588 கோடி ரூபாய் முதலீட்டில் ஸ்ரீபெரும்புதூரில் காற்றழுத்த கருவிகள் உற்பத்தித் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ரூ. 1,588 கோடி முதலீட்டில் சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சாம்சங் நிறுவனத்தின் 1,588 கோடி ரூபாய் முதலீட்டில் ஸ்ரீபெரும்புதூரில் காற்றழுத்த கருவிகள் (Compressor) உற்பத்தித் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை திமுக அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

தமிழக அரசின் சாம்சங் நிறுவனத்துடனான ஒப்பந்தம் மூலம் உள்ளூர் மக்கள், பெண்கள் என 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பேசினார். 

ஒப்பந்தம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (15.03.2022) சென்னையில், பன்னாட்டு தொழில் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் 1,588 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய காற்றழுத்த கருவிகள் (Compressor) உற்பத்தித் திட்டத்தை ஸ்ரீபெரும்புதூரில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

சாம்சங் நிறுவனம், 450 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், கணினித்திரைகள், குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் மற்றும் சலவை சாதனங்கள் உற்பத்தி செய்யும் திட்டத்தை ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள சிப்காட் நிறுவனத்தின் சிறப்புப் பொருளாதார மண்டலத்திலும், ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பூங்காவிலும் (உள்நாட்டு கட்டணப்பகுதி) அமைத்திட உத்தேசித்து முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் 10.11.2006 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

ஒரே வருடத்திற்குள் ஆலை கட்டி முடிக்கப்பட்டு 13.11.2007 அன்று, கருணாநிதியால் திறந்தும் வைக்கப்பட்டது. அந்த முதலீடு நடப்பாண்டில் 1,800 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இன்று நடைபெற்ற இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், சாம்சங் நிறுவனத்தின் புதிய விரிவாக்கத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் 2022-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் நிறைவு பெறும் எனவும், 2022-ஆம் ஆண்டு இறுதிக்குள் ஆண்டொன்றிற்கு 80 லட்சம் அளவிற்கு காற்றழுத்த கருவிகள் உற்பத்தி மேற்கொள்ளவும், 2024-ஆம் ஆண்டு இறுதிக்குள் 144 இலட்சம் அளவிற்கு அதன் உற்பத்தியைப் பெருக்கிட திட்டமிட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச்  செயலாளர் ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி, இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (SIPCOT) மேலாண்மை இயக்குநர் த. ஆனந்த், இ.ஆ.ப., சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தென்மேற்கு ஆசிய தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கென் காங் (Ken Kang), சாம்சங் நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையின் மேலாண்மை இயக்குநர் பியோங் ஜிங் கோன்ங் (Byong Jin Kong), சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் சியோங் டியேக் லிம் (Seong Taek Lim), சாம்சங் நிறுவனத்தின் இந்தியாவிற்கான துணை மேலாண்மை இயக்குநர் பீட்டர் ரீ (Peter Rhee), தொழிலதிபர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com