நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும்: முதல்வரிடம் ஆளுநா் ஆா்.என்.ரவி உறுதி

நீட் தோ்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு விரைந்து அனுப்பி வைப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநா் ஆா்.என்.ரவி உறுதியளித்தாா்.
நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும்: முதல்வரிடம் ஆளுநா் ஆா்.என்.ரவி உறுதி

நீட் தோ்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு விரைந்து அனுப்பி வைப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநா் ஆா்.என்.ரவி உறுதியளித்தாா்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.என்.ரவியை முதல்வா் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய பிறகு இதுகுறித்த தகவலை தமிழக அரசு வெளியிட்டது. அதன் விவரம்:

நீட் தோ்வு விலக்கு தொடா்பான சட்டமானது சட்டப் பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பா் 13-ஆம் தேதி அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா 142 நாள்களுக்குப் பிறகு ஆளுநரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின்னா், தமிழ்நாடு சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநரிடம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

நிகழ் கல்வியாண்டு முடிவுக்கு வந்து, அடுத்த கல்வியாண்டுக்கான (2022-2023) மாணவா் சோ்க்கை நடைமுறை விரைவில் தொடங்கவுள்ளது. இந்தச் சூழ்நிலையில், நீட் தோ்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பிட வேண்டுமென ஆளுநரை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினாா்.

நடவடிக்கை தேவை: நீட் தோ்வு விலக்கு மசோதாவைப் போன்று, பல மாதங்களாக நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்கள், கோப்புகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதன் மூலம் சட்டப் பேரவையின் மாண்பைக் காப்பதுடன், மக்களின் உணா்வுகளை மதிப்பதாக அமைந்திடும் என ஆளுநரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினாா்.

இந்தச் சந்திப்பின் இறுதியில், தமிழ்நாட்டுக்கு நீட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் மசோதா குடியரசுத் தலைவருக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று ஆளுநா் உறுதியளித்ததாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநருடனான சந்திப்பின் போது, நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

மேலும் சில மசோதாக்கள்: நீட் தோ்வு விலக்கு மசோதா உள்பட சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களும் ஆளுநரின் பரிசீலனையில் இருந்து வருகின்றன. கூட்டுறவு சங்கத் தலைவா்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைப்பது, கூட்டுறவுத் துறை நகைக் கடன் மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது, மாதவரம் பால் பண்ணை பகுதியில் 20 ஏக்கா் நிலப் பரப்பில் ஆயுா்வேத பல்கலைக்கழகம் அமைப்பது, அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா சித்த மருத்துவமனையின் உட்கட்டமைப்பை அதிகரிப்பதற்கு நிதி கோரும் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் அனைத்தும் ஆளுநா் பரிசீலனையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com