மாணவர்கள் கண்டிப்பாக இதை செய்யக் கூடாது; டிஜிபி சைலேந்திர பாபு

இந்த குற்றத்தை மாணவர்களாகிய நீங்கள் கண்டிப்பாக செய்யக் கூடாது என்று காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, மாணவர்களுக்கு தனது முகநூல் பதிவு மூலம் அறிவுரை வழங்கியுள்ளார்.
காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு
காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு

தற்கொலை என்பது சமுதாயத்திற்கு எதிரான குற்றம். இந்த குற்றத்தை மாணவர்களாகிய நீங்கள் கண்டிப்பாக செய்யக் கூடாது என்று காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, மாணவர்களுக்கு தனது முகநூல் பதிவு மூலம் அறிவுரை வழங்கியுள்ளார்.

அந்தப் பதிவில்,
மாணவர்களே!
இப்போது பள்ளிக் கூடங்கள் திறந்து வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் உங்களுக்கு இறுதி தேர்வுகள் நடக்க இருக்கின்றன. இப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருந்து, உங்கள் பாடங்களின் மீது அதிகமான அக்கறை செலுத்தி, அதிக மதிப்பெண் எடுக்க வேண்டிய நேரமிது. இந்த சூழ்நிலையில் சில விரும்ப தகாத செய்திகள் நமக்கு வந்து கொண்டிருக்கிறது. சில மாணவர்கள் தற்கொலை செய்ய முயற்சி செய்து இருக்கிறார்கள். இன்னும் சிலம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற செய்தி ஒரு சோகமான செய்தி. இது நல்ல செய்தியும் அல்ல. எனவே மாணவர்கள் இப்படிப்பட்ட மோசமான முடிவுகளை எடுக்கக் கூடாது என்பதற்காக இந்த பதிவு.

கல்லூரி மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களான நீங்கள் 16, 17 மற்றும் 18 வயதிற்கு உட்பட்டவர்களாகத்தான் இருப்பீர்கள். இன்னும் 60 முதல் 70 வருடங்கள் வாழ்வதற்கு நேரமிருக்கிறது. இந்த நேரம் தான் உங்களுக்கு மிக பெரிய சொத்து. இன்றைய ஒரு பின்னடைவு, சிறு தோல்வி, குறைவான மதிப்பெண் எடுத்து விட்டோம், வகுப்பு தலைவராக உங்களை நியமிக்கவில்லை மற்றும் பள்ளி கூட தலைவராக உங்களை நியமிக்கவில்லை என்கிற இந்த சிறுசிறு காரணங்களுக்காக உங்களது உயிரை மாய்த்துக் கொள்ளலாமா ? உயிரை மாய்த்துக் கொள்வது அதாவது நம்மை நாமே கொலை செய்வது என்பது மிக கொடூரமான மற்றும் மிகத் தவறான ஒரு முடிவாகும்.

மாணவர்களாகிய நீங்கள் இந்த நாட்டின் சொத்து. தற்கொலை என்பது சமுதாயத்திற்கு எதிரான குற்றம். இந்த குற்றத்தை மாணவர்களாகிய நீங்கள் கண்டிப்பாக செய்யக் கூடாது. இன்னும் சொல்லப் போனால் மாணவர்களாகிய உங்கள் வாழ்க்கையில் எதிர் கொள்ளும் இந்த சிறு தவறுகளுக்காகவோ, பின்னைடைவுகளுக்காகவோ அல்லது சிறிய தோல்விகளுக்காகவோ அல்லது உங்கள் பள்ளிக் கூடத்தில் ஒரு முதல்வனாகவோ அல்லது வகுப்பறையில் ஒரு தலைவனாகவோ ஆக முடியாமல் போனாலும் நாளடைவில் ஒரு நாட்டிற்கே முதல்வராகவோ, ஒரு அரசாங்கத்தின் தலைமை பொறுப்பான தலைமைச் செயலராகவோ, காவல்துறையின் தலைமை பொறுப்பிலோ, ஒரு விஞ்ஞானியகவோ ஒரு மருத்துவமனை நிர்வகிக்கவோ அல்லது தலைமை பொறுப்பிற்கோ வருவதற்கு எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கிறது. இப்படிப்பட்ட எந்த வாய்ப்பையும் நமது உயிரை மாய்த்துக் கொண்டால் நம்மால் அடைய முடியாது.

மாணவர்களே, உங்களின் பெற்றோர்கள் உங்களையே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், உங்களை வைத்துதான் அவர்களின் எதிர்காலம் இருக்கிறது என்று நினைக்கிறார்கள். நீங்கள் திடீரென்று உங்களின் உயிரை மாய்த்துக் கொண்டால் அவர்கள் படும் சிரமத்தை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். ஒரு வேளை உங்களுக்கு தற்கொலை செய்து கொள்ளும் மனநிலை ஏற்படுமானால், உங்களின் அருகாமையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்களிடத்தில் தொலைபேசியின் மூலம் தொடர்புக் கொண்டு ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் 1098 என்ற உதவி மையத்தை தொடர்பு கொண்டால் அங்கேயும் உங்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவார்கள். இதைவிட தற்கொலை தடுப்பு மையம் உதவி எண்ணான 9152987821 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் மற்றும் icallhelpline.org என்ற இணையதள உதவியையும் நீங்கள் நாடலாம்.

எனவே மாணவர்களே உற்சாகமாக இருங்கள். வரபோகும் தேர்வுகளுக்கு உடனடியாக உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். விரும்பி உங்களது பாடங்களை படியுங்கள். உங்களுக்கு படிப்பே சுகமானதாக இருக்கும். உங்களுக்கு எனது நல்வாழ்த்துகள் என காவல் துறை தலைமை இயக்குநர் அவர்கள் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com