தமிழக பட்ஜெட்: தலைவர்கள் கருத்து

2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழக பட்ஜெட்: தலைவர்கள் கருத்து

தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

கே.எஸ்.அழகிரி: பத்து ஆண்டுக்கால அ.தி.மு.க. ஆட்சியின் தவறான நிதி மேலாண்மையின் காரணமாக, தமிழக அரசின் கடன் சுமை 2021 இல் ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாகவும், பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ஏறத்தாழ ரூபாய் 3.50 லட்சம் கோடியாகவும் ஆக மொத்தம் கிட்டத்தட்ட ரூபாய் 10 லட்சம் கோடி கடன் சுமையை தி.மு.க. தலைமையிலான ஆட்சிக்கு விட்டுச் செல்லப்பட்டது. இதற்கான முழு விவரங்கள் நிதியமைச்சர் தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் விரிவாக வெளியிடப்பட்டது. இந்தப் பின்னணியில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசு பதவியேற்ற நாளிலிருந்து பணிகளைத் தொடங்கி, சாதனைகளைப் படைத்து வருகிறது. இதனால் தமிழகம் தலைநிமிர்ந்து பீடு நடை போட்டு வருகிறது. இதை உறுதி செய்கிற வகையில் தமிழகத்தின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

வைகோ: திமுக அரசு கடந்த 2021 மே மாதம் பொறுப்பேற்ற பின்னர், தாக்கல் செய்த முதல் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்த புதிய திட்டங்கள், அறிவிப்புகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு, இரண்டாவது முறையாக 2022-23 ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
கரோனா பெருந்தொற்றின் முதல் அலையைவிட இரண்டாம் அலை ஐந்து மடங்கு வீரியத்துடன் பரவியபோது, திமுக அரசு போராடி கட்டுப்படுத்தியது. எதிர்பாராமல் ஏற்பட்ட செலவினங்கள், பொருளாதார நெருக்கடி மிகுந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நிதி மேலாண்மையையும் கடைபிடித்தது.
2014 ஆம் ஆண்டிலிருந்து வருவாய் பற்றாக்குறை அதிகரித்து வந்த நிலையில், திமுக அரசின் செயதிறன் மிகுந்த நிதி நிர்வாகத்தால் நடப்பு ஆண்டில் ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மேல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது என்பது பாராட்டுக்கு உரியது. மேலும் நிதிப் பற்றாக்குறை 4.61 விழுக்காடு அளவிலிருந்து 3.80 விழுக்காடாகக் குறைந்து இருப்பதும் வரவேற்கத்தக்கது.

ராமதாஸ்: தமிழ்நாடு அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருக்கிறார். நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவையாக இருந்தாலும் கூட, தமிழ்நாட்டை  முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறைக்காக அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் மிகவும் வரவேற்கத்தக்கவையாகும். பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.32,599 கோடியிலிருந்து, ரூ.36,895 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதும், அரசு பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக 5 ஆண்டுகளில் ரூ.7,000 கோடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப் படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் பயனளிக்கக்கூடியவை ஆகும். தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்கள், அரசு பள்ளிகளுக்கு மாறி வரும் நிலையில், இது மிகவும் சரியான நடவடிக்கையாகும்.

இரா.முத்தரசன்: தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் திரு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2022 - 23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
சமூகத்தின் அனைத்துப் பகுதியின் உள்ளடங்கலான வளர்ச்சியை சாரமாகக்  கொண்ட “திராவிட மாதிரி” கொள்கையை அரசு பின்பற்றும் என அறிவித்துள்ளது. நிதி நிர்வாகத்தில் மேற்கொண்ட முயற்சியில் வருவாய் பற்றாக் குறையை குறைத்திருப்பது நல்ல முன்னேற்றமாகும்.
வகுப்புவாத, சாதி, மத, சனாதான சக்திகளால் ஏற்படும் சமூக சீரழிவை தடுக்க வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியார் ஈ.வெ.ரா.வின் சிந்தனைகளை 21 மொழிகளில் வெளியிடும் திட்டம், தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி வரும் அகழாய்வுப் பணிகளை கடல் பகுதி உள்ளிட்ட பல புதிய பகுதிகளில்  விரிவுபடுத்தியிருப்பது, மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சி, இலக்கியத் திருவிழா நடத்துவது,  ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் திறன் மேம்பாடு, சர்வதேச சதுரங்க விளையாட்டு போட்டியை நாட்டிலேயே முதன் முறையாக சென்னையில் நடத்துவது போன்ற வரவேற்கத்தக்க பல திட்டங்கள் இருக்கின்றன.

ஜி.கே.வாசன்: தமிழக அரசின் நடப்பு (2022 – 23) ஆண்டுக்கான பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப முக்கிய அம்சங்கள் இடம் பெறவில்லை. பட்ஜெட்டில்
வருவாய் பற்றாக்குறை 7,000 கோடியாக குறைந்துள்ளது என்றால் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாஸ்மாக் கடைகளின் மூலம் வருவாயை ஈட்டுவதில் அக்கறை காட்டுவதை விட மாற்றுத்திட்டங்களின் மூலம் வருவாயை ஈட்டுவதில் அக்கறை காட்ட
வேண்டும்.

பாரிவேந்தர்: தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதி அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியில் இடைக்கால பட்ஜெட்டை ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்த நிலையில், இந்த நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் இன்று தாக்கல் செய்தார். சிறப்பம்சமான பல்வேறு திட்டங்களுக்கிடையில் கல்விக்கடன் ரத்து பற்றிய அறிவிப்புகள் ஏதும் இல்லை என்ற சிறு ஏமாற்றத்தைத்தவிர தமிழக நிதிநிலை அறிக்கையை இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வரவேற்கின்றேன்.

சு.திருநாவுக்கரசர்: 2022 – 2023-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கையை வரவேற்று, பாராட்டுகிறேன். கல்லூரியில் சேரும் அரசு பள்ளிகளில்  பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000- உதவித் தொகை வழங்கும் திட்டம் மகளீர் கல்வி மற்றும் மேம்பாட்டிற்கு உதவக் கூடியது, வரவேற்பிற்குரியது,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com