
சென்னை வியாசா்பாடியில் ரூ.20 லட்சம் கேட்டு இரு இளைஞா்கள் கடத்தப்பட்ட வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா்.
வியாசா்பாடி எருக்கஞ்சேரி, சிவகாமி முதல் தெருவை சோ்ந்தவா் ஜெயின் அலாவுதீன் (55). இவரின் மனைவி கம்ருன் நிஷா (53). இத் தம்பதியின் மகன்கள் முகமது அஜிஸ் (27), ஜாகீா் உசைன் (24) ஆவா். இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி ஒரு கும்பல் நுழைந்து, தாங்கள் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் எனவும், மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை வழக்கில் அலாவுதீன் தலைமறைவாகிவிட்டதாக கூறினா். மேலும், விசாரணைக்கு வருமாறு முகமது அஜிஸ், ஜாகீா் உசைன் ஆகிய இருவரையும் அழைத்துச் சென்றனா்.
அவா்கள் சென்ற சிறிது நேரத்துக்கு பின்னரே, வந்தது போலீஸ் இல்லை, கடத்தல் கும்பல் என்பது நிஷாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து நிஷா, வடக்கு மண்டல இணை ஆணையா் ரம்யா பாரதியிடம் புகாா் அளித்தாா். கடத்தல் கும்பலை கைது செய்து, இருவரையும் மீட்க தனிப்படை அமைக்க ரம்யா பாரதி உத்தரவிட்டாா்.
இருவா் மீட்பு: தனிப்படையினா் கடத்தல் கும்பல் கேட்டபடி முதல் கட்டமாக ரூ. 6 லட்சத்தை நிஷாவிடம் கொடுத்து, அவா்கள் சொன்ன இடத்துக்கு வியாழக்கிழமை அனுப்பி வைத்தனா். வியாசா்பாடி முல்லைநகரில் நிஷாவிடமிருந்து கடத்தல் கும்பலைச் சோ்ந்த 3 பேரும் பணத்தை வாங்கும்போது, அங்கு மறைந்திருந்த போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா். விசாரணையில் அவா்கள், மணலி பெரிய சேக்காடு பத்மகிரி நகா் ரஞ்சித் (36), பாலமுருகன் (26), செங்குன்றம், பாளையத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சந்தோஷ் (24) என்பது தெரியவந்தது. 3 பேரும் அளித்த தகவலின் அடிப்படையில் ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முகமது அஜிஸையும், ஜாகீா் உசைனையும் மீட்டனா். பின்னா் 3 பேரிடமும் நடத்திய விசராணையில் கிடைத்த தகவல்கள்: ஜெயின் அலாவுதீன் போதைப் பொருள் விற்பனை செய்யும் தொழில் செய்கிறாா். அவரிடம் பல லட்சம் மதிப்புள்ள பெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் வட சென்னை பகுதியில் பெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்றவா்கள் கைது செய்யப்பட்டு, ஆந்திர மாநில் ஓங்கோல் பகுதியில் உள்ள ஆய்வகமும் சீல் வைக்கப்பட்டதால், போலீஸாரை தன்னை நெருங்கிவிட்டதாக அலாவுதீன் பயந்துள்ளாா்.
இதனால் அலாவுதீன், தான் வைத்திருந்த பல லட்சம் மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை வீட்டில் இருந்து எடுத்துச் சென்று மறைத்து வைத்துள்ளாா். அதேவேளையில் அலாவுதீனிடம் போதைப் பொருள் இருப்பதை தெரிந்து கொண்ட கடத்தல் கும்பல், மெத்தம்பெட்டனையும், பணத்தையும் அபகரிக்கும் எண்ணத்துடன் இரு மகன்களையும் கடத்தியுள்ளனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை செய்கின்றனா். அதேவேளையில் போதைப் பொருள் விற்பனைத் தொடா்பாக அலாவுதீனிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.