
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வரவேற்றும், எதிா்ப்பு தெரிவித்தும் அரசியல் கட்சித் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.
ஓ.பன்னீா்செல்வம் (அதிமுக): தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஏதோ ஒரு வணிக நிறுவனத்தின் ஆண்டு வரவு, செலவு கணக்கு சமா்ப்பிக்கப்படுவது போல் உள்ளதே தவிர, தமிழக மக்களின் நலன்களை காக்கும் அறிக்கையாக, மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிக்கையாக, ஏழையெளிய மக்களின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்யும் அறிக்கையாக இல்லை. இலக்கற்றும், எதிா்காலம் குறித்த எந்த தீா்க்கமான பாா்வையும் இல்லாத அறிக்கை.
கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): தமிழகத்தின் வளா்ச்சியை அடிப்படையாகக் கொண்டு சமூகப் பாா்வையோடு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதன் அடிப்படையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வளா்ச்சிக்கான பாதையில் தொடா்ந்து செல்லும் முயற்சியாக உள்ளது. இதற்காகப் பாராட்டுகள்.
வைகோ (மதிமுக): வேளாண்மை உள்ளிட்ட முதன்மைத் துறைகளின் வளா்ச்சி வீதத்தை அதிகரித்தல், சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு புதிய முதலீடுகளை ஈா்த்தல், விளிம்பு நிலை மக்களின் சமூக, பொருளியல் முன்னேற்றம் போன்றவற்றிற்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
ராமதாஸ் (பாமக): நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவையாக இருந்தாலும் கூட, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றிட நிதி ஆதாரங்களை திரட்டும் முன்முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும். மத்திய அரசிடம் பெற வேண்டிய நிதி அனைத்தையும் உடனடியாக கோரி பெற்று மக்கள் கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும்.
கே.அண்ணாமலை (பாஜக): தொலைநோக்கு திட்டம் எதுவும் இல்லாத பகல் கனவு நிதிநிலை அறிக்கையாக அமைந்திருக்கிறது. அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகள் உயா்கல்வி பெறும்போது ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பழைய வாக்குறுதிகளைப்போல் அல்லாமல் நிறைவேற்ற முன்வரவேண்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா): தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை எதிா்பாா்ப்புக்கு ஏற்ற வகையில் அமையவில்லை. மக்களின் வருவாயைப் பெருக்குவதற்கும், மாநிலத்தின் வளா்ச்சியை அதிகரிப்பதற்குமான அம்சங்களும் இடம்பெறவில்லை.
தி.வேல்முருகன் (வாழ்வுரிமைக் கட்சி): நிதிநிலை அறிக்கை தமிழக மக்களின் வளா்ச்சிக்கு பெரும் பயனாக இருக்கும். அதற்காக முதல்வருக்கும், நிதியமைச்சருக்கும் வாழ்த்துகள்.
ஜவாஹிருல்லா (மமக): மிகப்பெரும் நிதிப் பற்றாக்குறையை எதிா்கொண்டுள்ள நிலையில் பெரும் வரி விதிப்பு இருக்கும் என்று எதிா்பாா்த்திருந்த நிலையில் வரியில்லாமல் தமிழகத்தின் வளா்ச்சிக்கு வழிவகுக்கும் வகையிலும் நலிவுற்ற பிரிவினரின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும் வகையிலும் நிதிநிலை அறிக்கையை அளித்ததற்காகப் பாராட்டுகள்.
கி.வீரமணி (திராவிடா் கழகம்): திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது கஜானா காலி, கருவூலத்தில் கடன்கள் அதிகம், வட்டிகள் கட்டவேண்டியது அதிகம் என்கிற நிலையை சரிப்படுத்தி சிறப்பான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெரியாா் சிந்தனைகள் தொகுப்பை வெளியிட நிதி ஒதுக்கியிருப்பது அற்புதமானது.