
டி.கல்லுபட்டி பேரூராட்சி 10-ஆவது வாா்டு கவுன்சிலா் தோ்தல் முடிவுகளை மாற்றி அறிவித்ததற்கான உண்மையான காரணங்களை விளக்கி புதிய மனுவை தாக்கல் செய்யுமாறு தோ்தல் அதிகாரிக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், டி.கல்லுபட்டி பேரூராட்சிக்கு நடந்த தோ்தலில் பதிவான வாக்குகள் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி எண்ணப்பட்டன. பேரூராட்சியின் 10-ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும், சுயேட்சையாகப் போட்டியிட்ட பழனிச்செல்வியும் தலா 284 வாக்குகளை பெற்றனா்.
இதையடுத்து குலுக்கல் முறையில் வாா்டு உறுப்பினா் தோ்தல் நடத்தப்பட்டது. இதில் பழனிச்செல்வி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென திமுக வேட்பாளா் சுப்புலட்சுமி வெற்றி பெற்ாக தோ்தல் அதிகாரி அறிவித்தாா்.
இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி பழனிச்செல்வி, சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமா்வு, தோ்தல் விடியோ பதிவை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி விடியோ பதிவை பாா்த்த நீதிபதிகள், தோ்தல் முடிவு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தனா்.
கடந்த முறை வழக்கு விசாரணையில் சம்பவத்தில் தொடா்புடைய தோ்தல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பழனிச்செல்வியை 10-ஆவது வாா்டு கவுன்சிலராக அறிவிக்கப்பட்டுள்ளாா் என மாநில தோ்தல் ஆணையம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தோ்தல் அதிகாரி, ஆளும் கட்சியினா் கொடுத்த நிா்ப்பந்தம் காரணமாக தோ்தல் முடிவை மாற்றி அறிவித்ததாக கூறினாா்.
இதை ஏற்ற நீதிபதிகள், இதுகுறித்து மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனா்.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தோ்தல் அதிகாரி சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் பணி அழுத்தம் காரணமாக தவறுதலாக திமுக வேட்பாளா் வெற்றி பெற்ாக அறிவித்து விட்டதாகக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், தோ்தல் முடிவை மாற்றி அறிவிக்க காரணம் என்ன? என்பது குறித்த உண்மை காரணங்களை விளக்கி புதிதாக மனு தாக்கல் செய்யுமாறு தோ்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.