
நாலடியார் குறிப்பிடும் பனைமரம்: வேளாண் பட்ஜெட்டில் தனிக்கவனம்
நாலடியார் குறிப்பிடும் பனைமரத்தின் மேம்பாட்டுக்கு தமிழக வேளாண் பட்ஜெட்டில் தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையை இரண்டாவது ஆண்டாக தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் பனை மேம்பாடு குறித்து வெளியிட்ட அறிவிப்பில்,
பனை மேம்பாட்டு இயக்கம் - பனை மதிப்பு கூட்டு பொருள்களுக்கு முக்கியத்துவம்
பராமரிப்பின்றியும் பலன் தருபவை பனை மரங்கள். பனைமரம் விதையிட்ட நாளைத் தவிர மற்ற எந்த நாளும் கவனிக்காமல் விட்டுவிட்டாலும் தானாய் வளர்ந்து பயன்தரும் என்று நாலடியார் குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரம் தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும் இயைந்துள்ளது என்பதற்கு சங்க இலக்கியங்களே சான்றாகும். தமிழ் மொழியின் ஆரம்பகால ஊடகமாக பனை ஓலைகள் செயல்பட்டன.
தமிழ்நாட்டில் ஐந்து கோடி பனை மரங்கள் உள்ளன. சுமார் மூன்று லட்சம் குடும்பங்கள் பனை இலைகள், நார் ஆகியவற்றைக் கொண்டு கூடை பின்னுதல், பாய், கயிறு திரித்தல் போன்ற தொழில்களை சார்ந்தும், 11 ஆயிரம் பனைத் தொழிலாளர்கள் நுங்கு அறுவடை, பதநீர் இறக்குதல் மூலம் பனை மரங்களை வாழ்வாதாரமாகவும் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்க.. மகன், மருமகள், பேத்திகளை வீட்டோடு எரித்துக் கொன்ற முதியவர்
எனவே, பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், கடந்த ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் இவ்வரசினால் பனை மேம்பாட்டு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், பேரவைத் தலைவர் அவர்கள் சென்ற ஆண்டில், தனது சொந்த முயற்சியினால், ஒரு இலட்சம் பனை விதைகளை இலவசமாக இத்திட்ட செயல்பாட்டிற்கு வழங்கினார்கள்.