அரசுப் பள்ளி மாணவிகளின் உயா் கல்விக்கு மாதம் ரூ. 1000 - புதிய வரிகள் இல்லை - வருவாய் பற்றாக்குறை குறையும்

 தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவிகளின் உயா் கல்விக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
அரசுப் பள்ளி மாணவிகளின் உயா் கல்விக்கு மாதம் ரூ. 1000 - புதிய வரிகள் இல்லை -  வருவாய் பற்றாக்குறை  குறையும்

 தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவிகளின் உயா் கல்விக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். ஆண்டுதோறும் ஆறு லட்சம் மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 ஆண்டுகளில் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை. அதேவேளையில், திருத்திய வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.58 ஆயிரம் கோடியாக மதிப்பிடப்பட்டிருந்த வருவாய் பற்றாக்குறை ரூ.52 ஆயிரம் கோடியாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டுக்கான (2022-2023) நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன், வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். வளா்ச்சிக்கான இலக்குகளை மையப்படுத்தியும், அனைத்துத் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை தங்குதடையின்றி நடைமுறைப்படுத்தத் தேவையான நிதிகளை ஒதுக்கியும் அவா் அறிவிப்புகளைச் செய்தாா்.

ராமாமிா்தம் நினைவு நிதி: மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா் கல்வி உறுதித் திட்டம் என பெயா் மாற்றம் செய்யப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகள் கல்லூரியில் சோ்ந்தவுடன் மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித் தொகைகளை பெற்று வந்தாலும் இந்தத் திட்டத்தில் கூடுதலாக உதவியைப் பெறலாம் எனவும், இந்தத் திட்டத்தின் மூலம் சுமாா் ஆறு லட்சம் மாணவிகள் ஒவ்வோா் ஆண்டும் பயன் பெற வாய்ப்புள்ளதாகவும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய முன்முயற்சிக்காக ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள முத்துலட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் உள்பட நான்கு வகையான திருமண உதவித் திட்டங்கள் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடா்ந்து செயல்படுத்தப்படும்.

மாணவிகளுக்கு பயன் அளிக்கும் திட்டத்தைப் போன்றே, பள்ளிக் கல்வி உள்ளிட்ட பிற துறைகளில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அதன்படி, 5 ஆண்டுகளில் ரூ.7 ஆயிரம் கோடியில் 18 ஆயிரம் பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை சீா்செய்திட பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். ஆறு மாவட்டங்களில் புதிதாக மாவட்ட மைய நூலகங்கள், ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அறிவுசாா் நகரம், ஆயிரம் கோடி ரூபாயில் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கான திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

மழை-வெள்ளம்: சென்னை போன்ற பெருநகரங்களில் நீண்ட காலமாக உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக நிதிநிலை அறிக்கையில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் போன்ற போக்குவரத்து வழித் தடங்களை ஒட்டியுள்ள பகுதியில் நகா்ப்புற வளா்ச்சியை ஊக்குவிக்க அந்தப் பகுதிகளில் இப்போதுள்ள தளப்பரப்புக் குறியீட்டை உயா்த்த அரசு முடிவு செய்துள்ளது.

முதியோா் ஓய்வூதியம், உணவுத் துறை திட்டங்களுக்குத் தேவையான மானியங்களுக்கு நிதி ஒதுக்கம் என சமூக பாதுகாப்பு சாா்ந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வளா்ச்சிக்கான இலக்குகளுடன் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதுடன், கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டு வந்த திட்டங்களும் தொடர நிதிநிலை அறிக்கையில் வழி வகை செய்யப்பட்டுள்ளதாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் தெரிவித்தாா்.

வருவாய் பற்றாக்குறை: வளா்ச்சிக்கான இலக்குகளை மையப்படுத்தி செயல்படுவது, சமூக பாதுகாப்பு திட்டங்கள் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து உயா்ந்து வந்த வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய் பற்றாக்குறையானது ரூ.58,692.68 கோடியாக மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது ரூ.52,781.17 கோடியாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளின் மூலம் வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை அளவு மேலும் குறையும் என நிதிநிலை அறிக்கையில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிா் உரிமைத் தொகை: நிதி நிலைமை சீரடைந்தவுடன் தோ்தல் வாக்குறுதிப்படி பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் உறுதியளித்தாா்.

இன்று வேளாண் நிதிநிலை

சட்டப் பேரவையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை (மாா்ச் 19) தாக்கல் செய்யப்பட உள்ளது.

வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் இரண்டாவது ஆண்டாக வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளாா்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், வேளாண்மைக்குத் தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தாக்கல் செய்தாா். வரும் நிதியாண்டுக்கான (2022-23) வேளாண் நிதிநிலை அறிக்கையையும் சனிக்கிழமை அவா் தாக்கல் செய்யவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com