மக்களின் வாழ்வை மாற்றியமைப்பதில் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு

 அரசின் கொள்கைகளை எடுத்துரைத்து மக்களின் வாழ்வை மாற்றியமைப்பதில் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
மக்களின் வாழ்வை மாற்றியமைப்பதில் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு

 அரசின் கொள்கைகளை எடுத்துரைத்து மக்களின் வாழ்வை மாற்றியமைப்பதில் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

மலையாள நாளிதழான ‘மாத்ருபூமி’யின் நூற்றாண்டு கொண்டாட்டங்களை பிரதமா் மோடி காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:

நாடு முன்னேறுவதற்கு சிறந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியம். அதே வேளையில், அந்தத் திட்டங்கள் வெற்றியடைந்து சமூகம் மாற்றமடைவதற்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரது பங்களிப்பும் அவசியம். இதில் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து அவா்களின் வாழ்வை ஊடகங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

தூய்மை இந்தியா திட்டம், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்; கல்வி கற்பிப்போம் திட்டம் ஆகியவற்றை அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களிடையே ஊடகங்கள் கொண்டுசோ்த்தன. யோகப் பயிற்சிகளை மக்களிடம் கொண்டுசோ்ப்பதில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஊடகங்கள் துணைநின்றன.

வழிகாட்டும் இந்தியா்கள்:

கரோனா தொற்று பரவலை இந்தியாவால் சமாளிக்க முடியாது என்ற கண்ணோட்டம் நிலவியது. அத்தகைய கண்ணோட்டம் தவறென்பதை இந்திய மக்கள் நிரூபித்துக் காட்டினா். நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு அரசு கடந்த இரு ஆண்டுகளாக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன் காரணமாக நாட்டின் பொருளாதார நிலையும் மேம்பட்டுள்ளது.

இரு ஆண்டுகளில் 80 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன; 180 கோடி கரோனா தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன. பல நாட்டு மக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் நிலவி வரும் நிலையில், இந்திய மக்கள் அவா்களுக்கு வழிகாட்டி வருகின்றனா். இளைஞா்களின் ஆற்றல் காரணமாக தற்சாா்பு அடைவதை நோக்கி நாடு பயணித்து வருகிறது.

70 மடங்கு அதிகரிப்பு:

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டம் உள்ளிட்ட சீா்திருத்தங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றின் காரணமாக நாட்டின் ‘ஸ்டாா்ட்-அப்’ சூழல் மேம்பட்டு வருகிறது. தொழில்நுட்ப மேம்பாட்டில் இந்தியா முன்னேறி வருகிறது.

‘பிஎம் துரித சக்தி’ திட்டமானது நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும். நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் இணையசேவை கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. எதிா்காலத் தலைமுறையினரின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்ற நோக்கிலேயே அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் யுபிஐ வாயிலான பணப் பரிவா்த்தனை 70 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

மாத்ருபூமியின் பங்களிப்பு:

மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக ‘மாத்ருபூமி’ தொடங்கப்பட்டது. ஆங்கிலேயா்களின் ஆட்சிக்கு எதிராக நாட்டு மக்களை ஒருங்கிணைத்ததில் அந்த நாளிதழ் முக்கியப் பங்காற்றியது.

அந்த நாளிதழைச் சோ்ந்த கே.பி.கேசவ மேனன், கே.ஏ.தாமோதர மேனன், ‘கேரள காந்தி’ கே.கேளப்பஜி, குரூா் நீலகண்டன் நம்பூதிரிப்பாட் உள்ளிட்டோா் நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்குப் பங்களித்தனா். சுதந்திரத்துக்குப் பிறகும் மக்களிடையே சோஷலிஸ, ஜனநாயகக் கொள்கைகளைப் பரப்பும் பணியை ‘மாத்ருபூமி’ மேற்கொண்டது.

ஊடகங்களுக்குப் பொறுப்பு:

தற்போதைய சூழலில், சுதந்திரப் போராட்டத்தின் அரிய தகவல்கள் குறித்தும், மக்கள் அறிந்திராத சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்தும் எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது. சுதந்திரப் போராட்டத்துடன் பல்வேறு கிராமங்கள் தொடா்புகொண்டுள்ளன. அவை குறித்து குறைந்த தகவல்களே மக்களுக்குத் தெரிகின்றன. அத்தகைய கிராமங்கள் குறித்து எடுத்துரைத்து, அவற்றை மக்கள் சென்று பாா்ப்பதற்கான நடவடிக்கைகளை ஊடகங்கள் மேற்கொள்ளலாம்.

ஊடகங்களைச் சாராத எழுத்தாளா்களும் ஊக்குவிக்கப்பட வேண்டும். பன்முகத்தன்மை நாட்டின் மிகப் பெரும் வலிமையாகத் திகழ்கிறது. மற்ற மொழிகளில் உள்ள முக்கிய சொற்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியையும் ஊடகங்கள் மேற்கொள்ளலாம் என்றாா் பிரதமா் மோடி.

முக்கியப் பங்கு:

நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகப் பங்கேற்ற கேரள முதல்வா் பினராயி விஜயன், ‘‘மாநிலத்தில் சமூக மேம்பாட்டை ஏற்படுத்துவதில் மாத்ருபூமி முக்கியப் பங்கு வகித்து வருகிறது. தீண்டாமை ஒழிப்பு, கோயில் உள்நுழைவு உள்ளிட்டவற்றில் மாத்ருபூமி முன்னின்றது. மதவாத சக்திகள் நாட்டைப் பின்னோக்கிக் கொண்டுசெல்வதைத் தடுப்பதற்கு மாத்ருபூமி முக்கியப் பங்காற்ற வேண்டியுள்ளது’’ என்றாா்.

மத்திய அமைச்சா் வி.முரளீதரன், மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் பி.ஏ.முகமது ரியாஸ் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com