Enable Javscript for better performance
கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 10 கோடி ஒதுக்கீடு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு தமிழ்நாடு

    கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 10 கோடி ஒதுக்கீடு

    By DIN  |   Published On : 19th March 2022 10:58 AM  |   Last Updated : 19th March 2022 01:13 PM  |  அ+அ அ-  |  

    tpr9jnkarimbu_1_0901chn_125_3

    கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க தமிழக பட்ஜெட்டில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    தமிழக சட்டப் பேரவையில் 2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். 

    அதைத் தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

    சர்க்கரை சாகுபடி குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட அவர் பேசியதாவது: 

    பண்டைத் தமிழர்கள் கரும்பைக் கசக்கி சாறு பிழிந்து சர்க்கரையாக்கும் தொழில் நுட்பத்தைத் தெரிந்து வைத்திருந்தனர் என்பதைக் ‘கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்’ என்று நாலடியார் நவில்கிறது. கடித்தாலும் சுவை தருகிறது கரும்பு, காய்ச்சினாலும் வெல்லம் தருகிறது அதன் சாறு.  தொழில் துறை வசமிருந்த சர்க்கரைத் துறை வேளாண் துறைக்கு மாற்றப்பட்டது உழவர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி.

    கரும்பு உற்பத்தி, சர்க்கரைக் கட்டுமானத்தை உயர்த்துவதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கூட்டுறவு, பொதுத்துறை, தனியார் சர்க்கரை ஆலைகள் அதிக மகசூல் தரக்கூடிய, அதிக சர்க்கரைக் கட்டுமானம் கொண்ட கரும்பு இரகங்களைப் பயிரிட இவ்வரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

    சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்திடவும், கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், 2022-23 ஆம் நிதியாண்டில் பின்வரும்  திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

    கரும்பு விவசாயிகள், விவசாய சங்கங்களின், கரும்பு விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து, கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், சென்ற ஆண்டினைப் போலவே, 2021-22 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக கரும்பு டன் ஒன்றிற்கு 195 ரூபாய் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம்  கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்.

    கரும்பு சாகுபடி மேம்பாட்டுத்திட்டம்

    கரும்பு விவசாயிகளின் சாகுபடி செலவைக் குறைக்கும் நோக்குடன், வல்லுநர் விதைக்கரும்பு, திசுவளர்ப்பு நாற்றுக்கள், பருசீவல் நாற்றுக்கள், ஒரு பரு விதைக்கரும்பு, உயிர் உரங்கள், கரும்பு சோகை உரிக்கும் கருவிகள், நீரில் கரையும் உரங்கள், ஒட்டுண்ணி அட்டைகள் ஆகியவற்றை வழங்குவதற்கும், கரும்பு சோகையை தூளாக்குவதற்கும், ஹைட்ராலிக் டிப்ளர் நிறுவுவதற்குமான திட்டம் வரும் நிதி ஆண்டில் 10 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.

    சர்க்கரை ஆலைகளில் உள்ள ஆய்வுக் கூடங்களை  நவீனப்படுத்துதல்

    சர்க்கரை ஆலைகளில் உள்ள ஆய்வுக்கூடங்களில் ஆய்வுகளை விரைந்தும் துல்லியமாகவும்  மேற்கொள்ளும் வகையில் அமராவதி, அறிஞர் அண்ணா, செய்யார், செங்கல்ராயன், தருமபுரி, கள்ளக்குறிச்சி-1,
    கள்ளக்குறிச்சி - 2, எம்.ஆர்.கே., மதுராந்தகம், பெரம்பலூர், சுப்பிரமணிய சிவா, சேலம், திருப்பத்தூர், திருத்தணி, வேலூர் ஆகிய 15 கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் உள்ள ஆய்வுக்கூடங்கள் மொத்தம் மூன்று கோடி ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் நவீனப்படுத்தப்படும்.

    என்.பி.கே.ஆர்.ஆர் (NPKRR) கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் துவக்குதல்

    மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரே சர்க்கரை ஆலையான நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை, கரும்பு பற்றாக்குறை காரணமாக கடந்த 2016-17 அரவைப்பருவம் முதல் இயங்காமல் இருந்து வருகிறது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஆலையை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் வகையில் குழு ஒன்று  அமைக்கப்படும்.

    சர்க்கரை ஆலைகளில் நவீன தானியங்கி எடைத்தளங்கள் அமைத்தல்

    கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் கரும்பினைத் துல்லியமாக எடையிடும் வகையிலும்  கரும்பிற்கான விலையினை விவசாயிகளுக்கு விரைந்து வழங்கிடும் வகையிலும், 15 கூட்டுறவு, பொது சர்க்கரை ஆலைகளில் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள எடைத்தளங்கள் கணினி மூலம் தானியங்கி முறைக்கு மேம்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் கரும்பு எடை விவரங்கள் விவசாயிகளுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும், களப்பணியாளர்களுக்கும், குறுஞ்செய்தியாக (SMS)  உடனுக்குடன்  அனுப்பப்படுவது   உறுதி செய்யப்படும் என்று அறிவித்தார். 

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp