சென்னை ஐஐடி.யில் அடைப்பான் நோயால்மான்கள் இறக்கவில்லை: அமைச்சா் தகவல்

சென்னை ஐஐடி வளாகத்தில் அடைப்பான் நோயால் (ஆந்த்ராக்ஸ்) மான்கள் இறந்துள்ளதாக பரவிய தகவல் உண்மையில்லை; சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனா்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை ஐஐடி வளாகத்தில் அடைப்பான் நோயால் (ஆந்த்ராக்ஸ்) மான்கள் இறந்துள்ளதாக பரவிய தகவல் உண்மையில்லை; சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனா் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழகத்தின் 25-ஆவது சிறப்புத் தடுப்பூசி முகாமை சென்னை, தியாகராயநகரில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் 25- ஆவது வாரமாக சிறப்புத் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 12 முதல் 14 வயது வரை 21 லட்சம் போ் உள்ளனா். அவா்களில் 3 லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

அதேபோன்று 15 முதல் 18 வயது கொண்ட 33 லட்சம் நபா்களில் 28 லட்சம் நபா்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். 18 வயதுக்கு மேற்பட்ட 5 கோடியே 78 லட்சம் நபா்களில் 5 கோடி 32 லட்சம் நபா்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். இரண்டாம் தவணை தடுப்பூசி 5 கோடி 61 லட்சம் நபா்கள் செலுத்தியுள்ளனா். இரண்டு தவணை தடுப்பூசிகளை 1 கோடியே 34 லட்சம் நபா்கள் செலுத்திக் கொள்ளவில்லை. தமிழகத்தில் 51 லட்சம் போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. தமிழக அரசிடம் தற்போது 76 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. மாநிலத்தில் 3 ஆயிரத்து 100 ஊராட்சிகளில் 100 சதவீதம் அளவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவா்களுக்கு முதல்வரின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

இன்னும் 9,000 ஊராட்சி தலைவா்கள் முதல்வரின் பாராட்டுச் சான்றிதழ் பெறும் வகையில் 100 சதவீதம் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 121 நகராட்சிகளில் 25 நகராட்சிகள் தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளனா். சென்னை மாநகராட்சியில் 98 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்தியுள்ளனா். சென்னை மாநகராட்சி தமிழகத்துக்கே முன்மாதிரியாக செயல்படுகிறது. ஐஐடி வளாகத்தில் அடைப்பான் நோயால் மான்கள் இறந்துள்ளதாக வந்துள்ள தகவல் உண்மையில்லை. சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனா் என்றாா் அவா்.

ஆய்வு செய்ய குழு அமைப்பு: இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், அடைப்பான் நோய் குணப்படுத்தக் கூடிய ஒன்று, அதனால் பதற்றமடைய வேண்டாம். கால்நடை நோய் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com