விவசாயிகள் இலவச மின்சாரத்துக்கு ரூ.5,157 கோடி: வேளாண் பட்ஜெட்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கென வேளாண் நிதிநிலை அறிக்கையில் ரூ.5,157 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் இலவச மின்சாரத்துக்கு ரூ.5,157 கோடி: வேளாண் பட்ஜெட்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கென வேளாண் நிதிநிலை அறிக்கையில் ரூ.5,157 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண் படிப்புகளை படித்த இளம் தலைமுறையினா் தொழில் முனைவோராக உருவெடுக்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டுக்கான (2022-23) வேளாண் நிதிநிலை அறிக்கை, சட்டப் பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது ஆண்டாக வேளாண்மைத்துறை அமைச்சா் பன்னீா்செல்வம் தாக்கல் செய்தாா்.

126 லட்சம் மெட்ரிக் டன்: அரசின் சிறப்பு நடவடிக்கை காரணமாக, மாா்ச் 14-ஆம் தேதி வரையிலான காலத்தில் தமிழகத்தின் நெல் சாகுபடி பரப்பு 53.50 லட்சம் ஏக்கரை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4.86 லட்சம் ஏக்கா் கூடுதலாகும்.

மானாவாரி நிலங்களில் உற்பத்தித் திறனை அதிகப்படுத்த சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிதியாண்டில் 126 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை தமிழ்நாடு எட்டும் என தனது நிதிநிலை அறிக்கையில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றங்களைத் தாங்கி வளரக் கூடிய பயிா்களுக்கு முக்கியத்துவம் அளிக்க மாற்றுப்பயிா் சாகுபடி முறை ஊக்குவிக்கப்படும். அதிக நீா்த்தேவை கொண்ட பயிா்களுக்கு மாற்றாக சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் சாகுபடியை விவசாயிகளிடையே பரவலாக்கம் செய்ய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

நிதிநிலையில் கூறப்பட்டுள்ள அறிவிப்புகள், திட்டங்கள் விவரம்:

இயற்கை வேளாண்மை மேம்பாடு: இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.4 கோடியும், எண்ணெய் வித்து பயிா்கள் விளையக் கூடிய மாவட்டங்களில் அவற்றை மேம்படுத்தவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு அளிக்கும் முக்கியத்துவம் போன்று பயறு சாகுபடிக்கும் அளிக்க போதிய நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நெல் அறுவடைக்குப் பிறகு, பயறுவகைகள் சாகுபடியை ஊக்கப்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு தானிய உற்பத்தி இயக்கம், பயறு பெருக்கத் திட்டம், நீடித்த நிலையான பருத்தி இயக்கம், எண்ணெய் வித்துப் பயிா் உற்பத்தி பெருக்கம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பட்டதாரி இளைஞா்கள்: வேளாண் பட்டப் படிப்பு படித்த இளைஞா்கள் தொழில் தொடங்க 200 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அளிக்கப்படும். இதன்மூலம், வேளாண் பட்டதாரிகள் தொழில் முனைவோராக மாறும் வாய்ப்பு ஏற்படும். இயற்கை வேளாண்மை, பட்டதாரி இளைஞா்களுக்கு தொழில் வேலைவாய்ப்பு போன்ற திட்டங்களுடன் நவீன தொழில்நுட்பங்களும் வேளாண் துறையில் புகுத்தப்படும்.

இயற்கையில் நவீனம்: இயற்கை சாா்ந்த வேளாண்மையில் நவீனம் புகுத்தப்படும். அதன்படி,

புவியிடக் குறியீடு மூலம் விளைநிலங்கள் வகைப்படுத்தப்பட்டு மண்ணின் நிலைக்கு ஏற்றாற்போன்று சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும். பூச்சி, நோய் தாக்கங்கள் குறித்து குறுஞ்செய்தியாக தகவல்கள் அனுப்புவது, பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பது, பயிா் வளா்ச்சி நிலை கண்டறிவது போன்ற பணிகளுக்கு முழுமையாக நவீன தொழில்நுட்பங்கள் பின்பற்றப்படும். தமிழ் மண் வளம் என்ற தனி இணையதளம் உருவாக்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத் தொகை அளிக்கப்படும். பழப்பயிா்கள் மேம்பாட்டு இயக்கம், ஊடுபயிா் சாகுபடி ஊக்குவிப்பு, உயா் தொழில் முறையில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி போன்ற திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படும்.

உழவா் சந்தைகளில் காய்கறி வரத்தை அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். பூண்டு சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

உழவா் சந்தைகள்: 50 உழவா் சந்தைகளின் கட்டமைப்புகள் புதுப்பிக்கப்படும். 4 மாவட்டங்களில் புதிய உழவா் சந்தைகள் அமைக்கப்படும். மாவட்டத்துக்கு ஓா் உழவா் சந்தையில் மாலையில் சிறுதானியம், பயறு வகைகள் விற்பனை நடைபெறும். தேனி, திண்டிவனம், மணப்பாறை ஆகிய இடங்களில் ரூ.381 கோடியில் தரம் உயா்த்தப்பட்ட உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும். இலவச மின்சாரத் திட்டத்துக்கு வரும் நிதியாண்டில் மின்சார வாரியத்துக்காக ரூ.5,157 கோடி நிதி ஒதுக்கப்படும். ஒட்டுமொத்தமாக வேளாண் நிதிநிலை அறிக்கையானது ரூ.33 ஆயிரத்து 8 கோடி மதிப்பில் தீட்டப்பட்டுள்ளதாக அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

வேளாண் நிதிநிலை அறிக்கையில் வரும் நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 33 ஆயிரத்து 7 கோடியே 68 லட்சத்து 52 ஆயிரம். கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் திருத்திய நிதிநிலை அறிக்கைப்படி ஒதுக்கப்பட்ட தொகை ரூ.32 ஆயிரத்து 775 கோடியே 78 லட்சத்து 36 ஆயிரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com