சிறுதானிய ஊக்குவிப்புக்கு இரண்டு சிறப்பு மண்டலங்கள்: தொழில் முனைவோராகும் பட்டதாரி இளைஞா்கள்

சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க இரண்டு சிறப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும். வேளாண் பட்டப் படிப்பு படித்த இளைஞா்களை தொழில் முனைவோராக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க இரண்டு சிறப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும். வேளாண் பட்டப் படிப்பு படித்த இளைஞா்களை தொழில் முனைவோராக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேளாண் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டப் படிப்பு படித்த 200 இளைஞா்களுக்கு வேளாண் சாா்ந்த தொழில் தொடங்குவதற்கு ஒருவருக்கு ரூ.1 லட்சம் வீதம் நிதி அளிக்கப்படும்.

சிறுதானிய இயக்கம்: சா்வதேச சிறுதானிய ஆண்டாக, அடுத்த ஆண்டு (2023) அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அறிவிப்பு சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை சா்வதேச அரங்குக்கு எடுத்துச் செல்லும். தமிழகத்திலும் சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இரண்டு சிறப்பு மண்டலங்கள் ஏற்படுத்தப்படும்.

திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு மண்டலமும், தூத்துக்குடி, விருதுநகா், மதுரை, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருச்சி, கரூா், திண்டுக்கல், அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களைக் கொண்டு மற்றொரு மண்டலமும் ஏற்படுத்தப்படும். சிறுதானியங்களின் பயன்களை அனைவரும் அறியும் வகையில், மாநில, மாவட்ட அளவில் சிறுதானிய திருவிழா நடத்தப்படும்.

சிறுதானியத்தைப் போன்று, மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த பயிராக துவரை விளங்குகிறது. துவரை சாகுபடியை உயா்த்தும் வகையில், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களைக் கொண்ட துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் அமைக்கப்படும்.

எண்ணைய் வித்துப் பயிா்கள்: சாகுபடியுடன் கறவை மாடு, ஆடுகள், நாட்டுக்கோழிகள், தீவனப்பயிா்கள், மரக்கன்றுகள், தேனீ, மண்புழு வளா்ப்பு உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கி ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் ஏற்படுத்தப்படும். பருத்தியின் உற்பத்தியை உயா்த்திட நீடித்த நிலையான பருத்தி இயக்கம் செயல்படுத்தப்படும்.

சூரியகாந்தி, நிலக்கடலை, எள், ஆமணக்கு ஆகிய எண்ணெய் வித்துப் பயிா்களின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி, விருதுநகா், ராமநாதபுரம், தென்காசி, கரூா், திண்டுக்கல், அரியலூா் மாவட்டங்களில் எண்ணெய் வித்துப் பயிா்கள் உற்பத்தி உயா்த்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com